Published : 26 Jul 2020 12:46 PM
Last Updated : 26 Jul 2020 12:46 PM
ரஜினியை பாஜகவுடன் இணைக்க நிச்சயமாகப் பாடுபடுவேன் என்று நடிகரும், தயாரிப்பாளருமான பிரமிட் நடராஜன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக கட்சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநில தலைவர் எல்.முருகன். கட்சியின் அனைத்து பிரிவுகளும் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் திரையுலகில் ராதாரவி, மதுவந்தி, கெளதமி, விஜயகுமார், குட்டி பத்மினி, நமீதா, ஜெயலட்சுமி, கஸ்தூரி ராஜா, கங்கை அமரன், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.
இதனிடையே நடிகரும், முன்னணி தயாரிப்பாளருமான பிரமிட் நடராஜனும் பாஜகவில் இணைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் அளித்துள்ள பேட்டியில், ரஜினியை பாஜகவுடன் இணைக்கப் பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் பிரமிட் நடராஜன் பேசியிருப்பதாவது:
"ரஜினிக்கு பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. பாஜகவில் ரஜினி சார் பங்கேற்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு அவர் தலைமையேற்க வேண்டும் என்று ரொம்ப வருடங்களாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.
சோ உயிருடன் இருக்கும் போதே, இல.கணேசன் டெல்லியில் உத்தரவு வாங்கிவிட்டு, ரஜினியிடம் அவரை பேசச் சொல்வார். ரஜினி சாருக்கு பாஜக மீது ஒரு ஈடுபாடு. அதன் கொள்கையிலும் பிடிப்பு இருக்கிறது. எல்லாவற்றையும் மீறி அவருக்கு பிரதமர் மோடி மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
ரஜினி சார் எப்படியாவது பாஜகவுக்கு வந்துவிட்டால், தமிழ்நாட்டில் பன்மடங்கு பாஜக பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ரஜினி கட்சி ஆரம்பிக்காத பட்சத்தில், அவரை பாஜகவுடன் இணைக்க நிச்சயமாகப் பாடுபடுவேன். நான் பாஜகவில் இணைந்ததிற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்"
இவ்வாறு பிரமிட் நடராஜன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT