Published : 24 Jul 2020 04:50 PM
Last Updated : 24 Jul 2020 04:50 PM

காதல், போதை, இணையம் மற்றும் குற்றம்!- பரபரப்பைப் பற்றவைக்கும் நெட்ஃப்ளிக்ஸ் தொடர்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்றவுடன் நம் மனதில் தோன்றும் பிம்பம் என்ன? கொலைவெறி கொண்ட கண்கள், பளபள மாளிகை வாழ்க்கை, வாயில் புகையும் கியூபன் சுருட்டு, எப்போதும் பின்னணியில் நிற்கும் மெக்சிகன் அடியாட்கள்.

ஹாலிவுட் சினிமா உருவாக்கியிருக்கும் சித்திரம் இதுதான். இந்தப் பிம்பத்தையெல்லாம் உடைத்துப் போட்டிருக்கிறது, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் ‘ஹவ் டு செல் ட்ரக்ஸ் ஆன்லைன் (ஃபாஸ்ட்)’ How to Sell Drugs Online (Fast) தொடர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கரடுமுரடான வில்லன்களாக இல்லாமல் பதின்பருவ மாணவர்களாக இருந்தால் எப்படி இருக்கும்? ஆள்பலத்தை நம்பித் தொழில் செய்யாமல் இணையத்தைப் பயன்படுத்திப் போதைப்பொருள் விற்று ‘முன்னுக்கு வந்தால்’ எப்படி இருக்கும் என்பதுதான் இந்தத் தொடரின் கதை.

உண்மைச் சம்பவம்

இத்தொடரின் இரண்டாவது சீசன் மூன்று தினங்களுக்கு முன்பு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. வெளியான 3 நாட்களில் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இரண்டு சீசன்களாக வெளியாகியுள்ள இத்தொடர், ஒரு சீசனுக்கு 6 எபிசோடுகள் என்று பன்னிரண்டு எபிசோடுகளைக் கொண்டுள்ளது.

ஜெர்மன் மொழியில் உருவாகியுள்ள இத்தொடர் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜெர்மன் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் முக்கியப் பங்காற்றிவரும் ஸெபஸ்டின் கூலி, பிலிப், ஸ்டீவன் டிட்ஸா என்ற மூன்று எழுத்தாளர்கள் இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். 2015-ல் ஜெர்மனியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இன்னொரு சுவாரசியம்!

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஜெர்மன் மொழித் தொடர்கள் தனிக் கவனம் பெறத்தொடங்கியுள்ளன. இதற்கு முன்பு ஜெர்மன் மொழியில் வெளியான ‘டார்க்’ தொடர் உலகமெங்கும் பல கோடி ரசிகர்களைப் பெற்றுள்ளது. தற்போது அந்த வரிசையில் இந்தத் தொடரும் இடம்பெறவுள்ளது.

காதலை மீட்டெடுக்கக் கடத்தல்

ஜெர்மனியின் ரின்ஸ்லின் என்ற சிறு பகுதியில் வாழும் பள்ளி மாணவன் மோரிட்ஸ். அவனது காதலி லிசா, படிப்புக்காக ஓராண்டு அமெரிக்கா சென்றுவிட்டு ஜெர்மனிக்குத் திரும்பியிருப்பாள். திரும்பி வந்த காதலியிடம் சில மாற்றங்களை உணருவான் மோரிட்ஸ். சில நாட்களில் அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட, தன் மாற்றுத்திறனாளி நண்பனான லென்னி உதவியுடன் லிசாவைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பான். அப்போது, அவள் போதைப் பொருட்களை உட்கொள்ளத் தொடங்கியிருக்கிறாள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைவான்.

போதைப் பொருட்கள் தன்னிடம் இருந்தால், லிசாவின் அன்பை மீண்டும் பெற்றுவிடலாம் என்று நினைக்கும் மோரிட்ஸ் உள்ளூர் போதைப்பொருள் வியாபாரியான பூபாவிடம் செல்வான். அங்கே நடக்கும் சில குழப்பத்தால் அவனே போதைப்பொருள் விற்பனை முகவராக மாறிவிடுவான். பிறகு தன் நண்பன் லென்னியின் கணினி அறிவைப் பயன்படுத்தி, போதைப்பொருட்களை இணையத்தில் விற்கும் முறையை உருவாக்குவான். பல தடைகளைக் கடந்து உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கும்பலின் தலைவனாக மாறிவிடுவான் மோரிட்ஸ்.

போதைப்பொருள் கடத்தல்தான் இத்தொடரின் மையம் என்றாலும், நட்பு, காதல், ஊடல், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்படும் உணர்வுரீதியான உரசல்கள் என்று மனித உறவுகளின் பல பரிமாணங்கள் மெல்லிய இழைகளாகக் கோக்கப்பட்டிருக்கின்றன. கதையோட்டத்துடன் இணைந்த நகைச்சுவையும் தொடரின் பலம்!

இணையத்தின் அபாயம்

அன்றாட மனித வாழ்வை இணையம் எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதை இத்தொடர் ஆழமாகப் பேசுகிறது. இணையத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அரசுகள் முழங்கினாலும் சரியான அறிவு இருந்தால் பள்ளி மாணவர்களே இணையத்தில் மாயாஜாலங்கள் நிகழ்த்தலாம் என்பதைக் கச்சிதமாகப் பதிவுசெய்கிறது.

இணையம் என்பது எப்போதும் பாதுகாப்பானதாக இருந்ததில்லை. இனியும் இருக்கப்போவதுமில்லை என்பது இத்தொடரைப் பார்க்கும்போது புரியும்!

- க.விக்னேஷ்வரன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x