Published : 23 Jul 2020 10:40 AM
Last Updated : 23 Jul 2020 10:40 AM
கடந்த ஜூன் 14-ம் தேதி இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்தின் தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் விவாதிக்கப்பட்டு வந்தாலும், மன அழுத்தத்தால் அவர் இதைச் செய்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது.
சுஷாந்த்தின் மறைவு பாலிவுட் உலகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வாரிசு நடிகர்களும், அவர்களை ஆதரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுமே சுஷாந்த் தற்கொலைக்கு காரணம் என்று ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். சுஷாந்த் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சுஷாந்த் மரணத்துக்கு நீதி வேண்டி மெழுகுவர்த்தி ஏற்றும் போராட்டம் சமூக வலைதளங்களில் (நேற்று) முன்னெடுக்கப்பட்டது. இதில் கங்கணா ரனாவத், அங்கிதா, ஷேகர் சுமன் உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் மெழுகுவர்த்தி ஏற்றும் புகைப்படங்களை பகிர்ந்தனர். இவர்களோடு ஏராளமான ரசிகர்களும் அவரவர் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றினர்.
சுப்ரமணியன் சுவாமியின் வழக்கறிஞரான இஷ்கரண் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் முதன்முதலில் #Candle4SSR என்ற ஹாஷ்டேகுடன் மெழுகு வர்த்தி ஏந்தும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். பின்னர் சுஷாந்த் மரணத்துக்கு நீதி வேண்டி அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT