Published : 22 Jul 2020 11:11 AM
Last Updated : 22 Jul 2020 11:11 AM
இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் ரன்வீர் ஷோரி இடையே ட்விட்டர் தளத்தில் கருத்து மோதல் உருவாகியுள்ளது.
நேற்று (21.07.2020) ரன்வீர் ஷோரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார். அதில், ''ஏராளமான சுயாதீனப் போராளிகள் தற்போது முழுநீள பாலிவுட் பணியாளர்களாக மாறியுள்ளனர். இவர்கள்தான் பாலிவுட்டின் பவளக் கதவுக்குள் நுழையும் முன் 24 மணி நேரமும் பாலிவுட்டின் அமைப்பைப் பற்றி குறை கூறிக் கொண்டிருந்தவர்கள்'' என்று ரன்வீர் ஷோரி கூறியிருந்தார்.
அந்தப் பதிவைப் பகிர்ந்த அனுராக் காஷ்யப், ''நீங்கள் அப்படியா சொல்கிறீர்கள்? தயவுசெய்து இதை விவரிக்க முடியுமா? தயவுசெய்து யாருடைய பணியாளர்கள் யார் என்பதை சரியாகச் சொல்லவும்'' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் வார்த்தைப் போர் வெடித்தது.
ரன்வீர் ஷோரி: நான் எப்போதும் எனக்குத் தோன்றுவதை மட்டுமே பேசுவேன் என்பது உங்களுக்குத் தெரியும். நான் சொல்வதில் எந்த ஒளிவுமறைவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நான் சொன்னதிலேயே அனைத்து விளக்கமும் இருக்கிறது. பெயர்களைப் பொறுத்தவை. அவை என்னுடனே இருக்கட்டும். நான் யாரையும் அவமதிக்க முயலவில்லை. ஆனால், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.
அனுராக் காஷ்யப்: சரி வாருங்கள். இங்கேயே பேசுவோம். நான் யாருடைய பணியாளர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இந்த விவாதத்தில் உங்களுடைய கடந்தகால உறவின் வலியைக் கலக்காதீர்கள். நான் இங்கே எல்லாவற்றையும் பேசுவேன். மற்ற துறைகளைப் போலவே இந்தத் துறையிலும் மாற்றம் தேவை. நான் தனியாகவே செயல்படுகிறேன். சொல்லுங்கள்.
ரன்வீர் ஷோரி: நான் உங்களைச் சொல்லவில்லை. எனவே, நான் கூறியது உங்களைக் காயப்படுத்தியிருந்தால் நீங்கள் யாருடைய பணியாளர் என்பதை நீங்களே ஒப்புக் கொள்ளுங்களேன். என்னுடைய கடந்த கால வலி என்று முட்டாள்தனமாக கூறுவதற்கு என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை. என்னுடைய மனநல ஆலோசகராக முயல வேண்டாம். நான் உறுதியாகச் சொல்கிறேன், நான் உங்களை விட அதிகம் தனியாகச் செயல்படுகிறேன்.
அனுராக் காஷ்யப்: என்னை விட வெளியாட்களுடன் அதிகமாகப் பணியாற்றியவர்கள் யாரும் இருக்கமுடியாது. இங்கே நடப்பவற்றில் இருக்கும் பிரச்சினைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நம்புங்கள், நீங்கள் கூறியவை என்னைக் காயப்படுத்தவில்லை. கடந்த 27 ஆண்டுகளாக யாராலும் என்னைக் காயப்படுத்த முடியவில்லை. நான் மிகவும் அமைதியாக இருக்கிறேன்.
இதே போல நேற்று முன் தினம் கங்கணா - அனுராக் காஷ்யப் இடையே ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT