Published : 18 Jul 2020 03:53 PM
Last Updated : 18 Jul 2020 03:53 PM
பெரிய படத்தை வாங்க ஓடிடி தளங்களுக்கு நடுவில் போட்டி இருக்குமா என்ற கேள்விக்கு நெட்ஃப்ளிக்ஸ் இந்திய துணைத் தலைவர் பதிலளித்துள்ளார்
கரோனா அச்சுறுத்தலால் கடந்த 3 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் எந்தவொரு புதிய படமும் வெளியாகவில்லை. தமிழ், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே தயாராகியுள்ள படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
ஓடிடி தளத்தில் படங்கள் வெளியிடப்படுவதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள், மல்டிப்ளக்ஸ் நிறுவனங்கள் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால், படங்கள் வெளியீட்டைத் தடுக்க முடியவில்லை.
அமேசான், ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்களில் படங்கள் வெளியிடப்பட்டன. அதற்குப் போட்டியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளமும் களத்தில் இறங்கியுள்ளது. அபிஷேக் பச்சன் நடிக்கும் ‘லூடோ’, நவாசுதீன் சித்திக் நடிக்கும் ‘ராத் அகேலி ஹை’, தபு நடிக்கும் ‘எ சூட்டபிள் பாய்’ உள்ளிட்ட படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவை நெட்ஃப்ளிக்ஸில் வெளியாவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தற்போது இந்தி படங்கள் வெளியீடு தொடர்பாக, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் இந்திய துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில், 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார்.
அந்தப் பேட்டி பின்வருமாறு:
பெரிய நடிகர்களை நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்குச் சம்மதிக்க வைப்பது குறித்து?
நாங்கள் தயாரித்து வரும் அடுத்தடுத்த திரைப்படங்களைப் பார்த்தீர்கள் என்றால், கஜோல், அனில் கபூர் போன்ற பெரிய நடிகர்கள் நடிப்பதுதான். அதில நாங்கள் அதிகம் முதலீடு செய்துள்ளோம். ஹாலிவுட்டில், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் 'எக்ஸ்ட்ராக்ஷன்', சார்லீஸ் தெரானின் 'தி ஓல்ட் கார்ட்' ஆகியவை சமீபத்திய பெரிய நட்சத்திரப் படங்கள். எனவே, நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்கான படங்களில் பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைப்பதில் எங்களுக்குப் பெரிய சவால் இல்லை என்பதையே இது காட்டுகிறது. சரியான நடிகரை நடிக்க வைப்பது மட்டுமே எங்கள் நோக்கம் .
ஒரு பெரிய திரைப்படத்தை வாங்குவதற்கு ஓடிடி தளங்களுக்கு நடுவில் போட்டி இருக்குமா?
போட்டி என்று எதுவும் வழக்கமாக இருப்பதில்லை. எந்தத் தளத்துக்குப் போக வேண்டும் என்பது படத்தை எடுத்தவரின் விருப்பம் மட்டுமே. மற்ற தளங்களுக்காக நான் பேச முடியாது. ஆனால், நெட்ஃப்ளிக்ஸைப் பொறுத்தவரை நாங்கள் என்றுமே சிறந்த திறமைகளோடு பணியாற்ற வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். எனவே இயக்குநர்களை நாடி எங்களுடன் கூட்டுச் சேர்ந்து படத்தை எடுக்கச் சொல்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
இந்த ஊரடங்கில் நெட்ஃப்ளிக்ஸ் கற்ற படிப்பினைகள் என்ன?
இதுபோன்ற இக்கட்டான சூழலில், மக்களுக்கு அர்த்தமுள்ள பொழுதுபோக்குச் சேவையைத் தர முடிந்ததை எங்கள் அதிர்ஷ்டமாக, நன்றியோடு நினைவில் கொள்கிறோம். ஆனால் அதே நேரம், ஓடிடி தளங்களுக்கான இந்த வரவேற்பு தற்காலிகமாகவும் இருக்கலாம் என்பது எங்களுக்குத் தெரியும். இந்த காலகட்டத்துக்குப் பின் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மக்கள் எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடிப் பிடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதே எங்கள் மிகப்பெரிய படிப்பினை. எங்கள் தளத்தை இயக்குவதில் பயனர்களுக்குச் சிக்கல் இருந்திருக்கிறது, இன்னொரு பக்கம், ரசிகர்களால் மற்ற மொழிப் படங்களைப் பார்க்க முடியாமல் போவது, அவர்களுக்கு நேரம் கிடைக்காமல் போவது எனச் சவால்கள் இருந்திருக்கின்றன. அவை இப்போது மாறி வருவதைப் பார்க்க முடிகிறது பன்முகத்தன்மையும், பல வகை படைப்புகளும் இருப்பது முக்கியம் என்பதை இப்போது நாங்கள் புரிந்து வைத்துள்ளோம்.
'ஐரிஷ்மேன்' போல நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்த படங்கள் இந்தியாவிலும் திரைக்கு வருமா?
இப்போதைக்கு அப்படியான திட்டங்கள் எதுவுமில்லை. நாங்கள் தயாரிக்கும் படங்களோடு சேர்த்து, முதலில் திரையரங்குகளில் வெளியாகி பின் டிஜிட்டலுக்கு வரும். நாங்கள் வாங்கும் படங்களும் எங்கள் தளத்தில் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment