Last Updated : 17 Jul, 2020 04:59 PM

 

Published : 17 Jul 2020 04:59 PM
Last Updated : 17 Jul 2020 04:59 PM

நல்ல கற்றல் அனுபவம்: கெளதம் மேனன் பகிர்வு

சென்னை

கோவிட்-19 தொற்று பற்றிய ஆவணப்படத்துக்குக் குரல் கொடுத்தது நல்ல கற்றல் அனுபவமாக இருந்ததாக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ள அனைத்து முக்கிய நடவடிக்கைகள் குறித்து டிஸ்கவரி சேனலில் ஒரு ஆவணப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. COVID-19: India’s War Against The Virus என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படம், இந்தியாவின் ஊரடங்கு காலகட்டத்தில் பிரத்யேகமாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு விஞ்ஞானிகள், மருத்துவர்கள், அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் இதில் இடம்பெறவுள்ளனர். இந்த ஆவணப்படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும், இந்தி பதிப்புக்கு நடிகர் மனோஜ் பாஜ்பாயும் வர்ணனைக் குரல் கொடுக்கவுள்ளனர்.

இது குறித்து பேசியிருக்கும் இயக்குநர் கெளதம் மேனன், "நாம் திரைப்படம் எடுப்பவனாக இருந்தாலும் கூட வெப் சீரிஸ், ஆவணப்படம் என இப்போது யோசிக்க ஆரம்பித்து விட்டேன். காட்சிகளை ஒருங்கிணைப்பது எப்போதுமே என்னை ஈர்க்கும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

எனவே கரோனா கிருமிக்கு எதிராக இந்தியாவின் போராட்டத்தைப் பற்றிய ஒரு ஆவணப்படத்துக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்ற வாய்ப்பு வரும்போது அது எனக்குச் சுவாரசியமானதாக இருந்தது. கற்க ஒரு நல்ல வாய்ப்பாக அதைப் பார்த்தேன்" என்று கூறியுள்ளார்.

துறை வல்லுநர்கள், களப் பணியாளர்கள், நோயாளிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் இந்த நோயைக் கட்டுப்படுத்த திரை மறைவில் வேலை செய்யும் அத்தனை பேரைப் பற்றியும், வர்ணனை மற்றும் பேட்டிகள் மூலமாக இந்த ஆவணப்படம் சொல்கிறது. மேலும் இந்தத் தொற்றை எதிர்கொள்ள தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் ஆவணப்படம் சொல்லும்.

இந்த ஆவணப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வங்காள மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிஸ்கவரி செயலியில் வெளியாகியுள்ள இந்த ஆவணப்படம் ஜூலை 20 அன்று டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x