Published : 16 Jul 2020 03:47 PM
Last Updated : 16 Jul 2020 03:47 PM
எளிமையான முறையில் தமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகள் நடத்த மதன் கார்க்கி புதிய திட்டமொன்றை உருவாக்கியுள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு கல்வி நிறுவனத்திலுமே வகுப்புகள் தொடங்கப்படவில்லை. ஆகையால் அனைத்திலுமே இணைய வகுப்புகளாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதனிடையே, இணையம் வழியாக தமிழ் கற்க விரும்புவோருக்கு ஏற்ற வகையில் கார்க்கியின் ஆராய்ச்சி நிறுவனம் 'பயில்' என்னும் பாடத்திட்டத்தை வடிவமைத்து இணைய வகுப்புகளை தொடங்கியுள்ளது. கடந்த 3 மாதங்களில் நூற்றுக்கணக்கானோர் இந்த வகுப்புகளில் தமிழ் பயின்று வருகிறார்கள். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சைப்ரஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் இந்த வகுப்புகளில் இணைந்துள்ளனர்.
‘எழுது’, ‘பேசு’, ‘இலக்கணம்’, ‘இலக்கியம்’ என்ற நான்கு வகுப்புகள் இந்தப் பயில் இணைய அரங்குகளில் வழங்கப்படுகிறது. அனைத்து வயதினரும் இணைந்து பயிலலாம். ஒரே வகுப்பில் எட்டு வயது சிறுவர் சிறுமியரும் எழுபது வயது முதியவர்களும் ஒன்றாகக் கூடி தமிழ் பயின்று வருகிறார்கள். இரண்டு ஆண்டு ஆராய்ச்சியில் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பதை வாழ்நாள் கனவாகக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் கனவு முப்பது நாட்களில் நனவாகியிருக்கிறது. மதுரையில் உள்ள குயீன் மீரா பன்னாட்டுப்பள்ளி நிர்வாகம் பயில் பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வருகிறார்கள்.
பாடல்கள், கதைகள், ஓவியங்கள் போன்ற கலைவடிவங்களோடு இணைய விளையாட்டுக்களின் மூலம் தமிழ் பயிற்றுவிக்கும் இந்த முறை, இந்தத் தலைமுறை குழந்தைகளையும் பெற்றோரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
பயில் பாடத்திட்டத்தின் ‘எழுது’ வகுப்பு மிக எளிமையான புதுமையான முறையில் தமிழ் எழுத்துக்களை அறிமுகம் செய்து எழுத்தின் ஒலிகளுக்கான விதிகளையும் விளக்குகிறது. முப்பது நாட்களின் முடிவில் இந்த வகுப்பில் பயின்ற மாணவர்கள் கதைகள் படிக்கவும் எழுதவும் தொடங்கியுள்ளனர்.
‘பேசு’ வகுப்புகள் பேச்சுத்தமிழுக்கான எளிய விதிகளையும் வெவ்வேறு சூழல்களில் பேசப்படும் சொற்களையும் சொற்றொடர்களையும் வரைபடங்கள் கொண்டு விளக்குகிறது. இந்த வகுப்பில் பயின்ற மாணவர்கள் அச்சமின்றி தமிழில் பேசத்தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியரோடும் பிற மாணவர்களோடும் பேசி விளையாடும் விளையாட்டுக்களால் இந்த வகுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
முப்பது நாட்களில் தமிழ் இலக்கண அடிப்படையை பயிற்றுவிக்கும் ‘இலக்கணம்’ வகுப்பு எளிமையான முறையில் படிப்படியாக தமிழ் இலக்கணத்தை விளக்குகிறது.
சங்க இலக்கியம் முதல் தற்காலத் திரைப்பாடல்கள் வரை வெவ்வேறு கதைகள், பாடல்கள், இலக்கிய வகைகளை அறிய, சொற்களையும் பொருளையும் புரிந்து கொள்ள, இலக்கியங்களைப் பாராட்டக் கற்றுக்கொள்ள ‘இலக்கியம்’ வகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
www.karky.in/payil என்ற இணைய தளத்தில் இந்த வகுப்புகளைப் பற்றிய விவரங்களை அறியலாம். உலகெங்கும் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு இந்தப் பாடத்திட்டத்தை எடுத்துச் செல்லும் முயற்சியிலும் மொழி குறித்த ஆராய்ச்சிகளிலும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT