Last Updated : 10 Jul, 2020 01:20 PM

2  

Published : 10 Jul 2020 01:20 PM
Last Updated : 10 Jul 2020 01:20 PM

இணைந்து இசையமைத்த கடைசிப் படம்;  ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்! 

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படம் எனும் பெருமையையும் சேர்த்துக் கொண்ட, மிகப் பிரமாண்டமான வெற்றிப் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. முதல் படமான ’வெண்ணிற ஆடை’ வெளிவந்து அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே வெளியானது ‘ஆயிரத்தில் ஒருவன்’.

சிவாஜியை வைத்து அதிக படங்களைத் தயாரித்தவர் பி.ஆர்.பந்துலு. ‘தங்கமலை ரகசியம்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘கர்ணன்’ முதலான படங்களை வழங்கிய பி.ஆர்.பந்துலு, எம்ஜிஆரை வைத்து தயாரித்து இயக்கிய முதல் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இவர்கள் இணைந்த முதல் படமே மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டது. வசூலை வாரிக்குவித்தது. எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் படங்களின் வரிசையில், எவர்கிரீன் வரிசையில் இடம்பிடித்த படமாகவும் அமைந்தது.

எம்ஜிஆர் - நாகேஷ் ஜோடி மிகச் சிறந்த காமெடியை வழங்கியது. நாகேஷின் காமெடிகளின் உச்சம் பெற்ற படங்களில், இந்தப் படமும் ஒன்று. எம்ஜிஆர் - நாகேஷ் ஜோடி போல, எம்ஜிஆர் - நம்பியார் காம்பினேஷனிலும் இது கவனம் ஈர்த்த படமாக அமைந்தது.

மனோகர், நம்பியார், ராமதாஸ் என்று மூன்று வில்லன்கள். மூவரின் வில்லத்தனமும் வேறுபட்டிருந்தது, படத்தின் வெற்றிக்கு ரொம்பவே பலம் சேர்த்தது.
இப்படித்தான், எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடியும் பேசப்பட்டது. இந்தப் படம் வருவதற்கு முன்பு வரை, எம்ஜிஆர் - சரோஜாதேவியை சூப்பர் ஜோடி என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த ஒரு படம், ‘ஆயிரத்தில் ஒருவன்’ அப்படியே மாற்றியது என்றுதான் சொல்லவேண்டும்.

படத்தின் இசையும் பிரமாண்டம்தான். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும் இணைந்து எத்தனையோ காவியப் பாடல்களை வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திலும் அப்படித்தான் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தார்கள்.

’ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன் ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா’ என்ற பாடல், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘நாணமோ’ பாடலும் அப்படித்தான் எம்ஜிஆர் - ஜெயலலிதாவுக்கான டூயட் பாடலாக அமைந்தது. எம்ஜிஆர்- ஜெயலலிதா எத்தனையோ டூயட் பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் முதல் டூயட் எனும் பெருமை இந்தப் பாடலுக்கு அமைந்தது. கண்ணதாசன் எழுத, டி.எம்.எஸ். - சுசீலா பாடியிருந்தார்கள்.

’ஆடாமல் ஆடுகிறேன்’ பாடலை வாலி எழுதியிருந்தார். டைட்டிலைச் சொல்லும் பாடலான ‘உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்’ என்ற பாடலையும் ’பருவம் எனது பாடல்’ பாடலயும் வாலி எழுதினார். முக்கியமாக எம்ஜிஆர் கொள்கை சொல்லும் பாடலாக ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலாவது அமைந்துவிடும். இதில் ‘ஏன் என்ற கேள்வி’ என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இதையும் வாலி எழுதினார்.

‘ஓடும் மேகங்களே’ என்ற பாடல் கண்ணதாசன்.’நாணமோ இன்னும் நாணமோ’ பாடலும் கவியரசர்தான். முக்கியமான பாடலான ‘அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்’ என்ற பாடலும் அவர்தான் எழுதினார்.

எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இதில், ‘ஏன் என்ற கேள்வி’யும் ‘அதோ அந்தப்பறவை போல’வும் பட்டிதொட்டியெங்கும் சென்று தாக்கத்தை ஏற்படுத்தியது. எம்ஜிஆர் இமேஜை உயர்த்தின. இன்றைக்கும் எம்ஜிஆர் பிறந்தநாள், நினைவுநாள் முதலான தருணங்களில், அந்த விழாக்களில் இந்தப் பாடல் ஒலிபரப்புவார்கள். எம்ஜிஆர் பாடல்கள் டானிக் என்போமே... அப்படியான டானிக் பாடல்கள் இவையிரண்டும்!

ஒவ்வொரு பாட்டிலும் வெரைட்டி காட்டினார்கள் மெல்லிசை மன்னர்கள். ‘ஓடும் மேகங்களே’வுக்கு உள்ளே வரும் இசை, உருக வைத்துவிடும். ‘அதோ அந்தப் பறவை போல’ பாடலின் ஹம்மிங்கை முணுமுணுக்காதவர்களே இல்லை. ‘பருவம் எனது பாடல்’ எனும் பாடலில் அப்படியொரு துள்ளலிசையை இழைய விட்டிருப்பார்கள்.
மெல்லிசை மன்னர்கள் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கினார்கள். இந்தப் படம்தான் இருவரும் இணைந்து இசையமைத்த கடைசிப் படம். இதன் பின்னர், இருவரும் தனித்தனியே இசையமைக்கத் தொடங்கினார். மெல்லிசை மன்னர்கள் என்பது போய், மெல்லிசை மன்னர் என்றானார் எம்.எஸ்.வி. அதேபோல், விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்பது போய், டி.கே.ராமமூர்த்தி என்றானார் ராமமூர்த்தி.

1965ம் ஆண்டு, ஜூலை மாதம் 9ம் தேதி வெளியானது ‘ஆயிரத்தில் ஒருவன்’. படம் வெளியாகி, 55 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் பந்துலுவின் இயக்கத்தையும் மெல்லிசை மன்னர்களின் பாடல்களையும் மறக்கவே முடியாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x