Last Updated : 09 Jul, 2020 10:47 AM

1  

Published : 09 Jul 2020 10:47 AM
Last Updated : 09 Jul 2020 10:47 AM

விரைவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஓடிடி தளங்கள் 

கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆங்காங்கே சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் இன்னும் முழுமையான இயல்பு நிலை திரும்பவில்லை. சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சினிமாத் துறை பலரும் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களின் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமான முறையில் உயர்ந்துள்ளது. திரையரங்கங்களுக்கு செல்ல இயலாததால் பலரும் ஓடிடி தளங்களை நாடி வருகின்றனர்.

இதனால் திரையரங்கில் வெளியாக முடியாமல் போன பல்வேறு திரைப்படங்களை அதன் தயாரிப்பாளர்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிட்டு வருகின்றனர். தமிழில் ‘பொன்மகள் வந்தாள்’, ‘பெண்குயின்’ போன்ற படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டன. இந்தியில் 7 படங்களின் வெளியீட்டு உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை தங்களின் கண்காணிப்புக்குள் கொண்டுவர மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது ஆன்லைன் ஒடிடி தளங்கள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் அதிகார வரம்பின் கீழ் இருந்து வருகிறது.

இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர் அமித் கரே கூறியுள்ளதாவது:

ஆன்லைன் ஓடிடி தளங்கள் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் இருந்து வருகிறது. ஆனால் அதை த்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர தீர்மானித்துள்ளோம். இது சம்பந்தமாக பல்வேறு அமைச்சகங்களையும் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை உள்ளது. இது மிகவும் அவசியமான ஒன்று.

அச்சு, வானொலி, தொலைகாட்சி, திரைப்படங்கள், ஓடிடி ஆகிய 5 வகையான ஊடகங்களில் ஒன்று மட்டும் முறைப்படுத்தப்படாமல் உள்ளது. ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் சென்சாருக்குள் வருவதில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x