Published : 08 Jul 2020 10:51 AM
Last Updated : 08 Jul 2020 10:51 AM
கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி, இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுஷாந்த் மறைவுக்குப் பிறகான விவாதங்கள் அனைத்திலும் அரசியல் கலந்திருப்பதாக இயக்குநர் அனுபவ் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
''தற்போது நடந்துகொண்டிருப்பவை அனைத்தும் எரிச்சலூட்டுபவையாக உள்ளன. அந்த இளைஞன் சற்று ஓய்வெடுக்கட்டும். அவர் மன அமைதியின்றி, ஓய்வின்றி, மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். அவரைச் சில காலத்துக்கு நாம் தனிமையில் விடவேண்டும்.
தன் உயிரையே மாய்த்துக் கொள்வதென்பது எளிதில் நடக்கக்கூடிய விஷயம் அல்ல. நாம் சற்று அமைதியாக இருக்கவேண்டும். ஆனால், நிறைய விஷயங்கள் பேசப்பட்டுவிட்டன. இதில் அரசியல் கலந்திருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். இது யாருக்கும் நல்லதல்ல. சுஷாந்துக்கும் இது நல்லதல்ல.
அப்படிப் பேசுபவர்கள் சுஷாந்த் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் யோசிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. இது தொந்தரவு செய்வதாக உள்ளது. எனக்கு அவரைத் தனிப்பட்ட முறையில் தெரியாது. அவரைச் சந்தித்ததும் இல்லை. ஆனால், எனக்கு வருத்தமாக உள்ளது. அவருக்கு வயது வெறும் 34 தான். நான் என் முதல் படத்தை 36 வயதில் இயக்கினேன். அவர் அதை விடவும் இளையவர். சுஷாந்த் தற்கொலை குறித்த ஒட்டுமொத்த விவாதங்களும் திட்டமிடப்பட்டவையோ என்று எனக்குத் தோன்றுகிறது''.
இவ்வாறு அனுபவ் சின்ஹா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT