Published : 07 Jul 2020 09:20 PM
Last Updated : 07 Jul 2020 09:20 PM
எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட இல்லை என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் தொடங்கிய காலத்தில் சமூக வலைதளத்தில் பலருடைய வரவேற்பைப் பெற்றவர் சூரி. அந்தச் சமயத்தில் தன் குழந்தைகளுடன் சிறு வீடியோக்களை உருவாக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுப் பாராட்டுகளைப் பெற்றார். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், வீடியோக்களை வெளியிடுவதை நிறுத்தினார்.
சென்னையிலிருந்த சூரி தொடர் ஊரடங்கு காரணமாக, தனது குடும்பத்துடன் சொந்த ஊரான மதுரைக்கு அருகிலுள்ள ராஜாக்கூர் கிராமத்துக்குச் சென்றுவிட்டார். அங்கு தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வருகிறார்.
தற்போது ராஜாக்கூரில் வளர்க்கும் 'கருப்பன்' என்ற காளையுடன் இருக்கும் படங்களை "ஊரடங்குக்கு நடுவுல, ஊரே அடங்கி நிக்கும் - எங்க கருப்பன்" நடந்து போனா!!" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் சூரி.
'கருப்பன்' காளை குறித்து சூரி கூறியிருப்பதாவது:
“கருப்பன் காளை இதுவரை 40-க்கும் மேற்ப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது இதுவரையில் கருப்பன் காளையை எவரும் பிடித்ததில்லை, ஏன் தொட்டதுகூட இல்லை. பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் பல பரிசுகளை வென்றுள்ளது எங்கள் கருப்பன்.
வென்ற பரிசுகளை எங்கள் கருப்பன் காளையைப் பராமரிப்பவர்களுக்கும், ஊர்மக்கள் வீட்டில் ஏதேனும் காதுகுத்து அல்லது திருமண விழா போன்ற விசேஷங்கள் நடக்கையில் அவர்களுக்கும் கருப்பன் காளை சார்பாக அளித்துவிடுவோம். தற்போது எங்கள் கருப்பன் காளையை தம்பி வினோத் பரமாரித்து வருகிறார்".
இவ்வாறு சூரி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT