Published : 06 Jul 2020 12:34 PM
Last Updated : 06 Jul 2020 12:34 PM

நடிப்பிலும் குரலிலும் தனித்துவம் காட்டிய நாயகி! ’கண்ணம்மா’, ‘பொன்னாத்தா’ வடிவுக்கரசிக்கு பிறந்தநாள்


சினிமாவில் நடிக்கவேண்டும் என்று ஆசையிலும் லட்சியத்திலும் திரைத்துறைக்குள் நுழைபவர்களும் நுழைந்தவர்களும் உண்டு. காலமும் சூழலும் அதற்குள் கொண்டு வந்து கை குலுக்கிவிட்டு, கை இணைத்துவிட்டுச் செல்வது மாதிரி வாழ்க்கை அமைத்துவிடும். அப்படியானவர்களும் இருக்கிறார்கள். இந்த இரண்டாவது வகையில்... சினிமாவுக்குள் நுழைந்து, இன்று வரைக்கும் தன் குரலாலும் தனித்த நடிப்பாலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து, மக்களின் மனங்களிலும் இடத்தைப் பிடித்து தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பவர்... வடிவுக்கரசி.


வேலூர் பக்கம் ராணிபேட்டைதான் பூர்வீகம். அப்பாவுக்கும் சினிமாவுக்கும் தொடர்பு உண்டு. சின்னச்சின்ன வேடங்களில் நடித்தாலும் பெரிய பெரிய இயக்குநர்களுக்கும் படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். இவரின் பெரியப்பா, தமிழ் சினிமாவில் தனக்கென பாணியை அமைத்துக் கொண்டு, எல்லோரும் கொண்டாடுகிற படங்களை, பயபக்தியுடன் பார்க்கச் செய்த ஏ.பி.நாகராஜன். ஆனால், சினிமா வாசமோ நேசமோ இல்லாமல்தான் வளர்ந்தார் வடிவுக்கரசி.


ஆனால், படம் போட்ட நாலாவது ரீலில் ஒரு டிவிஸ்ட் வைப்பது போலானதுதானே காலம். செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்கள் பரமபத பாம்பெனக் கொத்தி,கீழே வந்தார்கள். பள்ளியில் டீச்சர் வேலை. வாழ்வில் முதன்முதலாக வாங்கிய சம்பளம் 75 ரூபாய். குடும்பம் நடத்த இது போதவில்லை. இன்னும் உழைக்க இன்னும் உழைக்க புத்தி பரபரத்தது. தூர்தர்ஷன் வேலை கிடைத்தது. நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான ‘கண்மணிப் பூங்கா’வில் குழந்தைகளுக்கு கதைகளெல்லாம் சொல்லி அசத்தினார். மனப்பாடம் செய்யவேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் கதையையும் ஓரிடத்தில் முடிக்கவேண்டும். இந்தப் பணியைச் செய்ததுதான், பின்னாளில், சினிமாவுக்குள் நுழையும் போது ரொம்பவே உதவியது. ஆனால் தூர்தர்ஷன் சம்பளமும் பற்றாக்குறையாகத்தான் இருந்தது.


அந்த சமயத்தில், கன்னிமரா ஹோட்டலில் வேலை கிடைத்தது. அப்பாடா என்று மூச்சுவிடலாம். அந்த சமயத்தில், விளையாட்டாக சினிமாவுக்கு ஆள் தேர்வுக்கான வாய்ப்பு மடியில் வந்து விழுந்தது. இவரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, திரைவானில் பறப்பதற்கான விசாவைக் கொடுத்தது.


1978ம் ஆண்டின் தீபாவளி வடிவுக்கரசிக்கு ஸ்பெஷல் தீபாவளி. அன்றைக்குத்தான் இவரின் முதல் படம் வெளியானது. படத்தில் ஐந்தாறு கேரக்டர்கள்தான். அதில் இவரும் ஒருவர். படத்தில் வருவதோ இரண்டே காட்சிகள்தான். ஆனால் ரசிக மனங்களில் இடம்பிடித்தார். படத்தின் ஹீரோ, முதல்நாள் இவரின் நடிப்பைப் பார்த்துவிட்டு, இயக்குநரிடம் சென்று, ‘இந்தப் பொண்ணு சாதாரணமான பொண்ணு இல்ல. பெரியாளா வரும் பாருங்க’’ என்றார். அந்த நடிகர் கமல். இயக்குநர் பாரதிராஜா. படம்... ‘சிகப்பு ரோஜாக்கள்’.


அடுத்து ‘கன்னிப்பருவத்திலே’. முதல் படம் இரண்டுகாட்சிகள். அடுத்த படமோ நாயகி. அந்த கண்ணம்மா பாத்திரத்தை வெகு அற்புதமாகப் பண்ணியிருந்தார். அடுத்தடுத்து, ‘ஏணிப்படிகள்’, ‘கண்ணில் தெரியும் கதைகள்’ என மளமளவெனப் படங்கள். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோயின் கிரேடில் இருந்து, அடுத்தக் கட்டத்துக்கு வந்தார். அப்போது திரையுலகினரும் ரசிகர்களும் இதைப் பின்னடைவாக நினைத்திருக்கலாம். அவரே கூட அப்படி நினைத்திருக்கலாம். ஆனால், புலி பின்னே செல்வது பாய்வதற்கு என்பது போல், இவரின் பின்னடைவு, அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு வடிவுக்கரசியை தயார்படுத்தியது.


நாயகியாக நடிக்கும்போது, நடனமாடத் தெரியாததை, தவித்ததை அவரே சொல்லியிருக்கிறார். ஆனால் ஒருபோதும் நடிப்பில் ஒருபோதும் சோடை போகவில்லை வடிவுக்கரசி. மகேந்திரனின் ‘மெட்டி’ படம் இவரை மிகச்சிறந்த நடிகை என்று உணர்த்தியது.


‘ஹீரோயின் இடம் போச்சே’ என்றெல்லாம் நினைக்கவில்லை. முடங்கிவிடவில்லை. ஹீரோயினுக்கு அம்மா, ஹீரோவுக்கு அக்கா, அண்ணி என எந்தக் கதாபாத்திரமெல்லாம் அதில் தனித்துவத்தைக் காட்டினார் வடிவுக்கரசி. சிவாஜிக்கு மகளாக ‘வா கண்ணா வா’ படத்தில் நடித்தார். ‘படிக்காதவன்’ படத்தில் மனைவியாக நடித்தார்.முக்கியமாக, ‘முதல் மரியாதை’ படத்தில் நடித்தார். ‘பொன்னத்தா’வாகவே வாழ்ந்துகாட்டினார்.


தெக்கத்தி பாஷை பேசி தண்டட்டி போட்டுக் கொண்டும் அசத்தினார். ‘என்னுயிர்த் தோழன்’படத்தில் சென்னை ஸ்லம் ஏரியா அடாவடி கேரக்டரில் மெட்ராஸ் பாஷை பேசி ரவுசு பண்ணினார். மிகப்பெரிய பணக்காரத்தனத்துடனும் கர்வத்துடனும் நுனி நாக்கு ஆங்கிலத்துடனும் ‘வான்மதி’ படத்தில் பந்தா காட்டி, அலட்டலான நடிப்பைக் கொடுத்து அசத்தினார்.


‘அருணாச்சலம்’ படத்தின் கூன் கிழவி கேரக்டர், வடிவுக்கரசி நடிப்பின் அடுத்தகட்டம். எந்தக் கேரக்டராக இருந்தாலும் அதில் தன்னைப் பொருத்திக் கொள்கிற சாதுர்ய நடிப்புக்கு சொந்தக்காரர்கள் வெகு சிலரே. அந்தச் சிலரில் வடிவுக்கரசியும் ஒருவராக இருந்து பட்டையைக் கிளப்பினார்.


சினிமாவில் வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே, 90களில், தொலைக்காட்சி சீரியலில் நடித்தார். சொல்லப்போனால், அதுதான் முதல் மெகா சீரியலாக இருக்கும். ‘சக்தி’ எனும் சீரியலில் இவரின் கதாபாத்திரமும் அந்தக் கேரக்டருக்கு அவரின் முகபாவங்களும் ரியாக்‌ஷனும் மிகப் பிரமாண்டம் கூட்டின.
சீரியல்கள் ஒருபக்கம், சினிமா ஒருபக்கம் என தொடர்ந்து நடித்தார். நடித்துக் கொண்டிருக்கிறார். ‘நீர்ப்பறவையின்’ கதாபாத்திரத்திலும் ‘கண்ணே கலைமானே’விலும் தன் நடிப்பு முத்திரையைக் காட்டினார்.


வாழ்க்கையில் சகலத்தையும் ஏற்றுக் கொண்டு, அதை தன்னால் எந்த அளவு ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் செயல்படுத்தமுடியுமோ... அதற்கான பலனும் வெற்றியும் நிச்சயம் என்பதற்கு வடிவுக்கரசி மிகச்சிறந்த உதாரணம். ’என்னை ஏம்மா கருப்பா பெத்தே?’ என்கிற ’சிவாஜி’ ரஜினியின் கேள்விக்கு வடிவுக்கரசி சொல்லும் பதில் இன்று வரைக்கும் டிரெண்டிங்.


78ம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் வடிவுக்கரசி. பெரியப்பா ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘வடிவுக்கு வளைகாப்பு’ பட சமயத்தில் பிறந்ததால், வடிவுக்கரசி என்று பெயர் வைத்தார் பெரியப்பா. இன்று வரை தனக்கனெ ஒரு பாணி என அமைத்துக் கொண்டு, அரசியாகவே தனக்கான உலகில் வாழ்ந்து வருகிறார்.


ஒருகாலத்தில் ஓஹோ என்றிருந்த குடும்பம், நொடித்துப் போனதால் 75 ரூபாய் சம்பளத்தில் இருந்து தொடங்கிய வாழ்க்கை வடிவுக்கரசியுடையது. 42 வருட திரையுலக வாழ்க்கையில், இன்னமும் வடிவென ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.


’கன்னிப்பருவத்திலே’ கண்ணம்மா, ‘முதல் மரியாதை’ பொன்னாத்தா... வடிவுக்கரசிக்கு இன்று 62வது பிறந்தநாள்.


வடிவுக்கரசியம்மாவை வாயார வாழ்த்துவோம்; மனதார வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x