Published : 03 Jul 2020 09:28 PM
Last Updated : 03 Jul 2020 09:28 PM

கரோனா ஊரடங்கு: தமிழக அரசுக்கு விஜய் சேதுபதி வேண்டுகோள்

சென்னை

கரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் இந்தச் சமயத்தில் தமிழக அரசுக்கு விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலா எந்தவொரு படப்பிடிப்புமே இல்லாமல் நடிகர் - நடிகைகள் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். இடையே இறுதிக்கட்டப் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்தாலும், சென்னையில் கரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பால் அந்தப் பணிகளையும் நிறுத்திவிட்டனர். ஜூலை 6-ம் தேதியிலிருந்து மீண்டும் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே திரையுலக பிரபலங்கள் பலருமே, இந்த கரோனா ஊரடங்கில் நேரலையில் பேட்டிகள் அளித்து வருகிறார்கள். அவ்வாறு விஜய் சேதுபதி அளித்த பேட்டியில் இந்த கரோனா ஊரடங்கு, தன் நிலை குறித்து தெரிவித்துவிட்டு, தமிழக அரசுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது:

"நான் மிடில் கிளாஸ் குடும்பமாக இருக்கும் போது என்ன சம்பளம் வாங்கினாலும், 20-ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரை குடும்பம் நடத்துவது கஷ்டமாக இருக்கும். பணம் கடன் வாங்கியவர்கள், வங்கி லோன், வீட்டு வாடகை, குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் இதெல்லாம் மாறப் போவதில்லை. என்ன சொன்னாலும் மாறப் போவதில்லை.

மிடில் க்ளாஸ் குடும்பத்தினர் வேலைக்குப் போவது ரொம்ப முக்கியம் என்று எதிர்பார்க்கிறேன். பாதுகாப்பு முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எப்போது நிலைமை சீராகி வேலைக்குச் செல்வோம் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் வேலைக்குச் செல்ல வேண்டும். எனக்குமே பெரிய கஷ்டமாக இருக்கிறது. நிறையப் பேருக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கிறார்கள். அனைத்துமே சரி தான், ஆனால் இதற்கும் ஒரு தீர்வு வேண்டும்.

பொதுமக்களுக்கு என் வேண்டுகோள். முடிந்தளவுக்கு மனதையும், உடம்பையும் சோர்வில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தமிழக அரசுக்கும் ஒரு வேண்டுகோள். ரொம்ப முடியவில்லை, சீக்கிரம் வேலைக்குப் போக வேண்டும். நீங்கள் பாதுகாப்பு சார்ந்து எடுத்த அத்தனை முடிவுகளுக்கு எனது நன்றியும், வணக்கங்களும். நிறையப் பேரால் வாடகை உள்ளிட்ட விஷயங்களால் தாங்க முடியவில்லை. எனக்குத் தெரிந்த 2 பேரிடம் மாதக் கடன் தொகை கட்டவில்லை என்று ஆட்டோவை எல்லாம் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆகையால் தயவு செய்து சீக்கிரம் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x