Published : 02 Jul 2020 07:11 PM
Last Updated : 02 Jul 2020 07:11 PM
திறக்கப்படாத பட்டியலில் மல்டிப்ளக்ஸ்கள் இருப்பது தொடர்பாக இந்திய மல்டிப்ளக்ஸ் கூட்டமைப்புக்கு கவலை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுக்க கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மற்றும் மல்டிப்ளக்ஸ்கள் மூடி 100 நாட்கள் ஆகிறது. இதுவரை திறப்பது தொடர்பான எந்தவொரு அறிவிப்பையுமே மத்திய அரசு வெளியிடவில்லை.
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் வேலையில், அதில் திரையரங்குகள் திறப்பு தொடர்பாக எதையுமே மத்திய அரசு தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக இந்திய மல்டிப்ளக்ஸ் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
"உள்நாட்டு பயணங்கள், சந்தைகள், வர்த்தக மையங்கள் உள்ளிட்ட பொருளாதாரத்தின் மிக முக்கிய ஒரு பகுதி திறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், சினிமாவும் மல்டிப்ளக்ஸ்களும் மத்திய அரசின் இரண்டாம் கட்ட ஊரடங்கின் விதிமுறைகளில் திறக்கப்படக்கூடாத பட்டியலிலேயே இன்னும் இருப்பது இந்திய மல்டிப்ளக்ஸ் கூட்டமைப்புக்கு கவலை தருவதாக உள்ளது.
இது மிகவும் வருத்தத்துக்குரிய ஒரு விஷயமாக இருக்கிறது. ஏனெனில் சினிமா தியேட்டர்களும், மல்டிப்ளக்ஸ்களும் சமூக இடைவெளியை பின்பற்றுவதிலும், பாதுகாப்பான முறையில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதிலும் ஒரு சிறந்த உதாரணமாக திகழும். அமைப்பு சாராத கடைகள் திறக்கப்பட்டிருக்கும்போது, ஒரு அமைப்பின் கீழ் செயல்படும் தியேட்டர்களும் மல்டிப்ளக்ஸ்களும் ‘வருவாய் கட்டண’ முறைப்படி பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. எனவே சந்தைகளைப் போல் இல்லாமல் கூட்டத்தை கட்டுப்படுத்துவதிலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதிலும் எல்லா வசதிகளையும் கொண்டு, விதிமுறைகளும் கடைபிடிக்கப்படும்.
மல்டிப்ளக்ஸ் துறை இந்தியா முழுவதும் நேரடியாக 200,000 மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. இந்திய சினிமாத்துறையின் முதுகெலும்பான நாங்கள் கிட்டத்தட்ட 60 சதவீத வருவாயை பட வியாபாரத்துக்கு ஈட்டித் தருகிறோம். நடிகர்கள் இயக்குநர்கள் முதல் மேக்கப் மேன், லை பாய் வரை லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இந்திய சினிமாவை சார்ந்திருக்கிறது. விரைவாகத் திரையரங்குகளைத் திறப்பது மட்டுமே மெல்ல சினிமாத்துறை மீண்டு எழுவதற்கான வழி. அப்படியே திறந்தாலும் எல்லாம் சகஜ நிலைக்கு திரும்ப 3- 6 மாதங்கள் நாம் காத்திருக்க வேண்டும். இவையெல்லாம் சினிமாத்துறை சமாளிக்க வேண்டிய சவால்கள், நாம் நம்பிக்கை வைத்து அரசாங்கத்தின் உதவியோடு நாம் அந்த சவால்களை முறியடிப்போம்.
உலக அளவில், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளில் பொதுமக்களுக்காகத் திரையரங்குகள் திறக்கப்பட்டு, அதிக அளவிலான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் விளைவாக, உலகம் முழுவதுமுள்ள மிகப்பெரிய 20 சினிமா மார்கெட் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. பாதிப்பு இல்லாத பகுதிகளில் உடனடியாக தியேட்டர்களை திறப்பதன் மூலம் எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்று மல்டிப்ளக்ஸ் கூட்டமைப்பு உறுதியாக நம்புகிறது"
இவ்வாறு இந்திய மல்டிப்ளக்ஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT