Published : 02 Jul 2020 03:51 PM
Last Updated : 02 Jul 2020 03:51 PM
அனைத்து நீதியரசர்களுக்கும் மனமார்ந்த நன்றி என்று சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சேரன் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்துப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை தற்காலிகமாக சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் ஜூன் 30-ம் தேதி தங்கள் விசாரணையை தொடங்கினர். கொலை வழக்குப் பதிவு செய்து ஆய்வாளர் ரகு கணேஷ், உதவி ஆய்வாளரான பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோரைக் கைது செய்தனர். இன்னும் 2 பேரை தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக காவல்துறையில் நடைபெற்றுள்ள கைது சம்பவத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"அரசும் சட்டமும் மக்களுக்கான பாதுகாப்புக்காகத் தான். கரோனா காலம் என்றும் பார்க்காமல் களமிறங்கி பத்து குழுக்களாக இயங்கி அதிரடி கைதுகளை நடத்தும் சிபிசிஐடி அதிகாரிகளுக்கும் நீதித்துறையில் நேர்மையுடன் இயங்கும் அனைத்து நீதியரசர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
விசாரணைகளும் அதற்கான தீர்ப்பும், அரசும், அரசு அதிகாரிகளும் சட்டத்துறையும் மக்களுக்கான நலம் காக்கவே இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை உருவாக்கும்படி இருக்கவேண்டும். காவல்துறை மீது மக்களுக்கு இருக்கும் அச்சத்தை போக்கும் படியாகவும் அமைய வேண்டும். அமைதியான வாழ்வுக்கு வழிவகுப்போம்"
இவ்வாறு இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT