Published : 25 Jun 2020 04:59 PM
Last Updated : 25 Jun 2020 04:59 PM
கரோனா நெருக்கடிக்குப் பின் வெளியாகும் முதல் திரைப்படம் என்ற பெயரை, பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் 'கோல்மால் அகைன்' திரைப்படம் பெற்றுள்ளது.
2017-ம் ஆண்டு ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன், தபு, பரினீதி சோப்ரா, அர்ஷத் வார்ஸி உள்ளிட்ட எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்திருந்த திரைப்படம் 'கோல்மால் அகைன்'. முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான இது விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையே பெற்றாலும் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றது.
தற்போது சர்வதேச அளவில் கரோனா நெருக்கடியால் திரையரங்குகள் உட்பட, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நியூஸிலாந்து நாட்டில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அங்கு திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. வெளியீட்டுக்குத் தயாராக பல பாலிவுட் படங்கள் வரிசையில் இருந்தாலும், அனைத்து நாடுகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட்டால்தான் படத்தின் வியாபாரத்துக்கு நல்லது என்பதால் 2017-ம் ஆண்டு வெளியான 'கோல்மால் அகைன்' படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இயக்குநர் ரோஹித் ஷெட்டி, " 'கோல்மால் அகைன்' படத்தை நியூஸிலாந்தில் மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதனால் கோவிட்டுக்குப் பிறகு வெளியாகும் முதல் இந்திப் படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. நியூஸிலாந்தில் கரோனா தொற்று இல்லை. ஜூன் 25-ம் தேதி அன்று 'கோல்மால் அகைன்' திரைப்படத்துடன் அரங்குகள் திறக்கப்படுகின்றன. 'என்ன நடந்தாலும், ஆட்டம் தொடர வேண்டும்' என்று சொன்னது சரிதான்" என்று பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து ஒரு பஞ்சாபி மொழித் திரைப்படமும் நியூஸிலாந்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து பிஜி நாட்டில் 'சிம்பா' திரைப்படத்தை வெளியிடத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருவதாக பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT