Last Updated : 24 Jun, 2020 04:36 PM

1  

Published : 24 Jun 2020 04:36 PM
Last Updated : 24 Jun 2020 04:36 PM

’’ ‘பாய்ஸ்’, ‘காதல்’, ‘சுப்ரமணியபுரம்’ படத்துல உன்னை நடிக்கவிடாம நான் தடுத்தேனா?’’ - மகன் சாந்தனுவிடம் பாக்யராஜ் விரிவான விளக்கம்  

’டேட் சன் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜை, அவரின் மகன் சாந்தனு பேட்டி எடுத்தார்.

அந்தப் பேட்டியில் சாந்தனு கேட்ட கேள்விகளும் பாக்யராஜ் அளித்த பதில்களும் :

‘‘அப்பாகிட்ட கேள்வி ஏதாவது இருந்தா அனுப்புங்கன்னு டிவிட்டர் போட்டேன். அதுல நிறைய பேர் கேள்விகள் அனுப்பிச்சிருக்காங்க. அந்தக் கேள்விகளைத்தான் இப்போ கேக்கப் போறேன்’ என்றார் சாந்தனு.

‘’அடுத்த கேள்விப்பா. ‘பாய்ஸ்’, ‘காதல்’, ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் நடிக்கவேண்டிய சாந்தனுவை ஏன் நடிக்கவிடாமல் தடுத்தீர்கள்?’’

‘’தடுத்துட்டேன்னு சொல்றது தப்பு. அப்படியில்லை. ஷங்கர் வந்து ‘பாய்ஸ்’ படத்துக்குக் கேக்கும்போது, நீ ரொம்ப சின்னப்பையன். அப்போ, லவ்வுகிவ்வுன்னு நடிச்சா, நல்லாருக்காதேன்னு யோசிச்சேன். அப்போ உனக்கு (சாந்தனு) மீசை கூட முளைக்கலை. அதனால இப்போ வேணாமேன்னு சொன்னேன்.

அதேபோலதான், பாலாஜி சக்திவேல் வந்து சொன்னப்போ, ‘காதல்’ படத்தோட கதையை ரொம்பவே ரசிச்சேன். ஆனா, கதைல மெக்கானிக். ஸ்கூல்ல படிக்கிற பொண்ணைக் கூட்டிட்டு ஓடுறான்னு சொன்னப்போ... ஒரு மெக்கானிக் கேரக்டருக்கு உண்டான வயசெல்லாம் வரலை உனக்கு.

பாலாஜி சக்திவேல்கிட்ட, ‘கதை ரொம்ப நல்லாருக்கு. படம் நல்லா ஓடும். ஆனா, ரொம்பச் சின்னப்பையனா இருந்தா, ‘என்ன படம் இது, இவ்ளோ சின்னப்பையனா இருக்கறவன் இப்படிலாம் செய்வானா?ன்னு ஆடியன்ஸ் யோசிப்பாங்க. கொஞ்சம் மெச்சூர்டா இருக்குற பையனாப் பாருங்க. நல்ல சப்ஜெக்ட். நல்லா ஓடும்னு சொன்னேன். அதனாலதான் ‘காதல்’ படத்துல நீ நடிக்கமுடியாமப் போச்சு.

சசிகுமாரோட ‘சுப்ரமணியபுரம்’ படமும் அப்படித்தான். படம் ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. அவர் சொன்னவிதமே பிரமிப்பா இருந்துச்சு. அட்வான்ஸ் கூட கொடுத்துட்டாரு. ஆனா சசிகுமார் அப்போ என்ன சொன்னார்னா... ‘உடனே ஷூட்டிங் போகணும்’னு சொல்லிட்டாரு.

அப்ப என்னன்னா... தாணு சார் தயாரிப்புல, அவர் மகன் இயக்கத்துல, நீ ஹீரோவா நடிக்கிற ‘சக்கரக்கட்டி’. ஏ.ஆ.ரஹ்மான் இசை. அதான் உன் முதல்படம்னு எல்லாமே கமிட் பண்ணியாச்சு. கிராண்டா பப்ளிச்சிட்டியும் பிரமாண்டமா கொடுத்தாச்சு. ஏ.ஆர்.ரஹ்மான்கிட்ட போய், ‘எப்போ ஸாங்ஸ் தருவீங்க?’ன்னு கேக்கமுடியுமா? அவருக்கு மூட் வரும்போதுதான் பாட்டு தருவாரு. அவரைப் போய் எப்படி பிரஷர் பண்றது?

தாணு சார் படம் முடியாம, ‘சுப்ரமணியபுரம்’ பட ஷூட்டிங் போனாக்க, ’கொஞ்சம் படத்தை நிறுத்தி வைங்க. தாணு சார் படம் முதல்ல வந்துடட்டும்னு சொல்லமுடியுமா? சசிகுமார்கிட்ட, ‘கொஞ்சம் தள்ளிப்போடமுடியுமா?’னு கேட்டுப்பாத்தேன். அவரோட நிலையைச் சொன்னார். அவரையும் எதுவும் சொல்லமுடியாது. என்னோட நிலையையும் சொன்னேன். இப்படித்தான் ‘சுப்ரமணியபுரம்’ படத்துல நடிக்கமுடியாமப் போச்சு.

ஆக, இப்படித்தான் ‘பாய்ஸ்’, ‘காதல்’, ‘சுப்ரமணியபுரம்’ படங்கள் மிஸ்ஸாச்சு’’ என்று தெளிவாக எடுத்துரைத்தார் பாக்யராஜ்.

‘’யாருக்கு எது அமையணுமோ அதுதான் அமையும். மிஸ்ஸாகுதுன்னா யாரும் எதுவும் பண்ணமுடியாது’’ என்றார் பாக்யராஜ்.

‘’அடுத்த கேள்வி... நீங்க ஆசைப்பட்டு,டைரக்ட் பண்ணமுடியாமப் போன ஹீரோ யாரு?’’

‘’ அப்படியொரு ஃபீலிங்... எல்லா நல்ல ஆர்ட்டிஸ்டைப் பாக்கும் போதும் வரும். எம்ஜிஆர் சார் நடிச்சு, ஸ்ரீதர் சார் டைரக்ட் பண்ணி ‘அண்ணா நீ என் தெய்வம்’ படம் பாதிவரைக்கும் எடுத்து நின்னுருந்துச்சு. அதை எடுத்து ‘அவசர போலீஸ்100’னு பண்ணினேன். அதேபோல, சிவாஜி சாரை வைச்சு டைரக்ட் பண்ண வாய்ப்பு வந்துச்சு. ‘தாவணிக்கனவுகள்’ பண்ணினேன். எனக்கு ரொம்ப ஹேப்பியா இருந்துச்சு.

ரஜினியை வைச்சு டைரக்ட் பண்ணலை. ஆனா, ‘நான் சிகப்பு மனிதன்’ பண்ணினேன். ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ல கெளரவ ரோல் மாதிரி பண்ணினேன். அந்தசமயத்துல நானே ஹீரோவா இருந்துட்டுறந்ததால, அவரை வைச்சு படம் பண்ணமுடியாமப் போச்சு.

கமலுக்கு, ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்துலயே டயலாக்ஸ் எழுதிருக்கேன். அப்புறம், ‘ஒரு கைதியின் டைரி’க்கு கதை வசனம் எழுதினேன்.

விஜய்க்கு ஒரு கதை சொன்னேன். ‘அங்கிள், இது நல்லாருக்கு, பண்ணலாம் அங்கிள்’னு சொன்னாரு விஜய். ஆனா அப்படியே தள்ளிப்போச்சு. அப்புறம் பண்ணமுடியாமலே போச்சு.

அஜித்தோட தெலுங்குப் படம் ‘பிரேம புஸ்தகம்’. பூர்ணசந்திர ராவ்தான் தயாரிப்பாளர். அந்தப் படத்தோட டைரக்டர், விசாகப்பட்டினம் கடற்கரைல ஷூட் பண்ணும்போது, அலை இழுத்துட்டுப் போய் இறந்துட்டாரு. அவங்க அப்பா ரைட்டர். பையன் மைண்ட்ல கதை எப்படி கொண்டு போகப் பிளான் பண்ணினார், க்ளைமாக்ஸ் என்னன்னு யாருக்குமே தெரியல. எதுவும் ஸ்கிரிப்டா, ரைட் அப்பா இல்ல.

அப்போ, பூரண சந்திரராவும் இறந்து போன டைரக்டரோட அப்பாவும் வந்து, படத்தைப் பாத்துட்டு, கதையோட க்ளைமாக்ஸ் விவரங்களையெல்லாம் சொன்னா நல்லாருக்கும்னு சொன்னாங்க. அப்புறம், அதையெல்லாம் பாத்துட்டு, அவர் என்ன கதை பண்ணிருந்தாரோ அதுக்கு எதெல்லாம் சரியா இருக்குமோ அதெல்லாம் எழுதிக் கொடுத்தேன்.

இப்படியான விஷயங்கள் நிறைய நடந்திருக்கு. ஆனாலும் முழுசா ஒர்க் பண்ணமுடியலியேனு ஒரு நினைப்பு இருந்துக்கிட்டுதான் இருக்கு’’ என்று தெரிவித்தார் பாக்யராஜ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x