Published : 20 Jun 2020 05:48 PM
Last Updated : 20 Jun 2020 05:48 PM
அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதை கொடுங்கள் என்று நடிகர் அஸ்வின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரகாலமாகவே பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள், துறையில் இருக்கும் அரசியல் பற்றி, அவர்களுக்குக் கிடைத்த மோசமான அனுபவங்கள் பற்றி வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் அபய் தியோலும் விருது நிகழ்ச்சிகளில் காட்டிய பாரபட்சம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார். அந்தப் பதிவு பெரும் வைரலானது. அந்தப் பதிவை மேற்கொளிட்டு நடிகர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"சிலரை வளரவிடாமல் ஒதுக்கி, குறைவாகப் பேசுவதைப் பற்றி உரையாடல் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நான் அபய் தியோலின் பதிவைப் படித்தேன். இது எல்லா நிலைகளிலும் நடக்கிறது என்பதை உணர்ந்தேன்.
வெளியிலிருந்து வரும் ஒரு ஆள் வெற்றி பெற்றால் மட்டுமே அவர் கொண்டாடப்படுகிறார். கடவுளாகப் பார்க்கப்படுகிறார். கடின உழைப்பு என்றும் தோற்காது என்ற வழக்கமான வாக்கியம், பொதுவில் வெற்றி பெற்றவர்களை வைத்து மட்டும்தான் கொண்டாடப்படுகிறது.
வாசுகி பாஸ்கருடன் பேசிய போதுதான் நான் இவ்வளவு வருடங்களாக மனத்துக்குள் எவ்வளவு தேக்கி வைத்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்.
உங்களை ஒதுக்கி, உங்கள் முயற்சிகளை மட்டம் தட்டி, அவமானப்படுத்தி, முதுகில் குத்துவார்கள். ஆனால் ஒருவர் தனக்குப் பிடித்த ஒரு விஷயத்தைச் செய்ய இந்த கசப்பான அனுபவங்கள் அத்தனையையும் தாங்க வேண்டும்.
என்னை ஒதுக்கப் பார்க்கும் புதுப்புது முயற்சிகளைப் பார்த்து நான் எதுவும் எதிர்வினையாற்றுவதில்லை என்றாலும், அனைவரையும் ஒரே மாதிரியான மரியாதையுடன் நடத்த மக்கள் முயல வேண்டும். ஒருவரை மட்டமாக நடத்திவிட்டு பின்பு அவரை கடவுளாக்குவதற்குப் பதிலாக ஒரு மனிதரை, மனிதராக நடத்த வேண்டும். நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படி".
இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.
'நடுநிசி நாய்கள்', 'மங்காத்தா', '7-ம் அறிவு', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'பிரியாணி', 'ஜீரோ' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் அஸ்வின். அவரது இந்தப் பதிவு தற்போது தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
the need to hammer every nail that stands out, and in the end an outsider is celebrated and treated like a god, only when they are successful.'Hard work never fails' is a cliche that is only celebrated when the result is a 'public' success.While speaking to @vasukibhaskar...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT