Published : 18 Jun 2020 10:25 AM
Last Updated : 18 Jun 2020 10:25 AM
கரோனா அச்சுறுத்தல் மற்றும் திரையுலகில் ஏறபட்ட திடீர் மரணங்களால தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் நடிகர் சிம்பு கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், அன்பின் பொதுமக்களுக்கும் உங்கள் சிலம்பரசனின் வணக்கங்கள்.
மிகுந்த துயரமான நாட்களாக இந்த சில நாட்கள் கடந்துபோகின்றன. டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகிய மூவருமே எனது அன்பிற்குரிய நண்பர்கள். இவர்களது இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது.
சினிமாவிற்கான இழப்பாகப் பார்க்கிறேன். எனது நண்பர்களை இழந்துவிட்ட பேரிழப்பாகப் பார்க்கிறேன். இவர்களின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்.
இழப்பால் துயருறும் மூவரின் குடும்பத்திற்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஆறுதலும் அவர்களைத் தேற்றிவிடாது என்பதறிவேன். எனது கண்ணீரும் இதயமும் உங்களின் இந்த நிலையை மீட்டெடுக்க வேண்டிக்கொண்டே இருக்கும்.
இதேபோல் கரோனா காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸின் சத்தம். இறப்பின் கதறல்.
கரோனாவின் பாதிப்பில் மரணமடைந்த குடும்பத்திற்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் 'தில் பேச்சுரா' படம் இசைப்புயலின் வேண்டுகோள் போல, அவரின் ரசிகர்களின் அபிமானத்தின்படி திரையரங்கில் வெளியாகி பெருவெற்றி பெற வேண்டும். இறப்பு ஒரு கலைஞனின் வெற்றியை நிறுத்திவிடாது என்பதை உலகறியச் செய்ய திரையரங்கில் வெளியாகட்டும். எனது வேண்டுகோளும் ஆசையும் அதுவே.
இந்த நோயைக் கண்டு யாரும் திக்குற வேண்டாம். பீதி அடைவதுதான் மிகப்பெரிய நோய்.
தைரியமாக எதிர்கொள்ளுங்கள். சுனாமி, கஜா புயல் என எத்தனையோ இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டு வெற்றி கண்டோம்.
நிறைய பேரின் வீடுகள் ஆசை ஆசையாய் வாங்கிய கார்கள் நீரில் மூழ்கிப் போயின. மீண்டெழுந்தோம். திரும்ப நிமிர்ந்து உட்கார்ந்தோம்.
இந்தக் கரோனா நம்மை நமக்கு உதவிக்கொள்ள வழிவகுக்காமல் வீட்டில் முடக்கிப் போட்டுள்ளது.
நேரடியாக உதவி செய்ய முடியாது. ஆனால் ஒருவருக்கொருவர் தைரியம் சொல்லுங்கள்.
கிளவுஸ் முகக் கவசம் அணிந்து சமூகத்தில் பரவியுள்ள இந்தக் கரோனாவை இல்லாத நிலையை உருவாக்குவோம்.
மனதளவில் தளர்ந்துபோய்விட வேண்டாம். எதற்கும் தற்கொலை தீர்வாகாது. எந்த நிலையிலிருந்தும் நாம் எழுந்து நின்று விடலாம். வெற்றி பெற்றுவிடலாம் என்பதை உங்கள் மனதிலிருந்து நீக்கிவிடாதீர்கள்.
மனபலம் கொண்டு கரோனாவை விரட்டுவோம். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்வது முக்கியம். நாம் நம்மை இழந்துவிடக் கூடாது என்றால் தைரியம் கொள்வது மட்டுமே தீர்வு. எல்லோருக்கும் எல்லோரும் இருக்கிறோம் என்பதைச் சொல்லி சொல்லி மனக் குழப்பத்திலிருந்து வெளியிலெடுப்போம். அதுவே நாம் இப்போது செய்ய வேண்டிய முக்கியமான வேலை.
செய்வோம். இந்த இடரைத் தாண்டி நிலைபெற்று வெல்வோம்''.
இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT