Last Updated : 16 Jun, 2020 02:52 PM

 

Published : 16 Jun 2020 02:52 PM
Last Updated : 16 Jun 2020 02:52 PM

பாலிவுட்டின் பொறியில் சிக்கிவிடாதீர்கள்: இளைஞர்களுக்கு இயக்குநர் ஹன்ஸல் மேத்தா எச்சரிக்கை

மும்பை

பாலிவுட்டில் ஒருவரது மதிப்பு அவரது வெற்றியைப் பொறுத்துத்தான் இருக்கும் என்றும், இங்கு இருக்கும் பொறிகளில் சிக்கிவிடாதீர்கள் என்றும் இயக்குநர் ஹன்ஸ்ல மேத்தா கூறியுள்ளார்.

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், ஞாயிற்றுக்கிழமை மும்பையில் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கு பாலிவுட்டில் இருக்கும் வாரிசு கலாச்சாரமும் அவருக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கப்படாமல், வெளி ஆளைப் போல அவரை நடத்தியதுமே காரணம் என்று பாலிவுட்டிலிருந்தே நடிகை கங்கணா ரணவத் உள்ளிட்ட பலரின் குரல்கள் எழுந்துள்ளன.

தற்போது, 'ஆக்சிடண்டல் ப்ரைம் மினிஸ்டர்', 'அலிகார்', 'சிட்டி லைட்ஸ்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஹன்ஸல் மேத்தாவும் கிட்டத்தட்ட இதே மாதிரியான கருத்தைக் கூறியுள்ளார்.

"இந்தத் துறையில் வெளியில் இருந்து வந்த பல இளைஞர்கள் உள்ளனர். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கான தேவை இருக்கும் வரை, நீங்கள் தான் அடுத்த பெரிய நட்சத்திரம் என்று உங்களை உணர வைக்கும் ஒரு அமைப்பு இங்கு உள்ளது. நீங்கள் தோல்வியடைந்த அடுத்த நொடி உங்களை கீழே இறக்கி கேலி செய்ய ஆரம்பிப்பார்கள். அந்த பொறியில் சிக்கிவிடாதீர்கள்.

உங்களைக் கொண்டாடும் ஒருவரே சில காலம் கழித்து உங்கள் வீழ்ச்சியையும் கொண்டாடுவார். இங்கு வெற்றி, தோல்வி இரண்டுமே நிலையற்றவை. ஆனால் நீங்கள் அப்படியல்ல. நேர்மையாக இருங்கள், உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். மற்றவர்கள் உங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்கள் தொடர்பு உங்கள் கலை, உங்கள் திறமை, உங்கள் ரசிகர்களுடன் தான் இருக்க வேண்டும். வேறெதுவும் முக்கியமல்ல.

ஒரு கட்டத்தில் நீங்கள் வெற்றிபெறுவீர்கள், தடுமாறுவீர்கள். ஆனால் உங்களை விட வேறெதுவும் முக்கியமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் புரிந்து வைத்திருப்பதை விட உலகம் பெரியது, கனிவானது. வாய்ப்புகளும் தான். நீங்கள் தாக்குப்பிடித்தால் அவை உங்களுக்குக் கிடைக்கும். என்றும் மனம் தளராதீர்கள்" என்று ஹன்ஸல் மேத்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x