Published : 16 Jun 2020 02:32 PM
Last Updated : 16 Jun 2020 02:32 PM
ஒரு சாதாரணமான படம், மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெறுமா? அப்படி பிரமிக்கத்தக்க வெற்றியை அடைந்த படத்தை சாதாரண படம் என்று சொல்லிவிடமுடியுமா? ஒரு சிம்பிளான கதைக்குள், அப்படியொரு இசையைக் கொடுத்துவிட முடியுமா? அப்படி ரசனையும் ரகளையுமான இசையைக் கொடுத்திருப்பதால், அதை சிம்பிள் கதை கொண்ட படம் என்று சொல்லிவிடத் தோன்றுமா? படத்தை நகர்த்தவும் ஈர்க்கவுமான காமெடிகள், கதையுடன் ஒட்டிக்கொண்டு வந்து, நம்முடன் இன்றுவரை பயணிக்குமா? அந்தக் காமெடியை இன்றைக்கும் சொல்லி, டிரெண்டிங்காக்குகிற அளவுக்கு இருப்பதால், அதை வெறும் காமெடியாகப் பார்க்கமுடியுமா? இப்படி ஆச்சரிய, அதிசய, வினோத கலவைகள் கொண்ட ‘கரகாட்டக்காரன்’ படத்தை மறந்துவிடுங்கள் என்று கட்டளையிட்டாலும் எவராலும் மறக்கமுடியாது என்பதுதான் உண்மை.
கிராமம். கரகாட்ட கோஷ்டி. இன்னொரு கிராமம். அங்கேயொரு கரகாட்டக் குழு. இந்தக் கோஷ்டியில் ஹீரோ. அந்தக் கோஷ்டியில் ஹீரோயின். நாயகியின் அப்பா, நாயகனுக்கு தாய்மாமா. அக்காவும் தம்பியும் ஒரு சண்டையால் பிரிந்துவிடுகிறார்கள். நாயகனுக்கும் நாயகிக்கும் உறவு தெரியாமலே மலர்கிறது காதல். இதனிடையே, நாயகியை, ஊரில் உள்ள பெருந்தனக்காரர் விரும்புகிறார். அவரின் விருப்பத்துக்கு ஹீரோயினின் அக்காபுருஷனும் தலையாட்டுகிறார். ஒருபக்கம், அம்மாவே நாயகனின் காதலை எதிர்க்கிறார். இன்னொரு பக்கம் அந்தப் பணக்கார மைனர் முட்டுக்கட்டை போடுகிறார். என்ன ஆனது? இருவரும் இணைந்தார்களா? என்பதை, நாயனம் முழங்க, மேளம் கொட்ட, உருமி மேளம் கிழிய, காற்சலங்கை ஒலிக்க... மண்மணக்கச் சொல்லியிருப்பதுதான்... ‘கரகாட்டக்காரன்’ டிரீட்மெண்ட்.
‘இதென்ன பெரியவிஷயம்? இப்படி படமே வந்ததில்லையா?’ என்று மற்ற படங்களைக் கேட்பவர்கள் கூட, ‘கரகாட்டக்காரன்’ படத்தை பொசுக்கென்று நாக்கின் மேல் பல்லைப் போட்டு எதுவும் சொல்லிவிடமாட்டார்கள். சொல்ல நினைத்த கதையை, சொல்லி வைத்த திரைக்கதையில்தான் இருக்கிறது படத்தின் மாய்ஜாலம். ராமராஜன், கனகா, காந்திமதி, சண்முகசுந்தரம், சந்திரசேகர், கோகிலா, சந்தானபாரதி, கவுண்டமணி, செந்தில், ஜூனியர் பாலையா, கோவை சரளா... மற்றும்பலர்... அவ்வளவுதான் கேரக்டர்கள்.
இயக்குநர் ராமராஜன், ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படம் தொடங்கி, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நம்முடன் நெருக்கமானார். அந்த ராமராஜன், கரகாட்டக்காரன். ‘என்னங்க இது... ராமராஜனுக்கு டான்ஸே சரியா வராது. அவர் கரகாட்டக்கார கேரக்டர். படத்துக்கும் ‘கரகாட்டக்காரன்’ன்னு பேரு’ என்று எவரும் கேட்கவில்லை. ஏனென்றால், அது ராமராஜன் காலம். தொட்டதெல்லாம் ஹிட்டான காலம்.
இன்னொன்று... தன் கதையிலும் கதை சொல்லும் பாணியிலும் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார் இயக்குநர் கங்கை அமரன். முக்கியமாக, தன் அண்ணன் இளையராஜாவின் இசையின் மீதும் ஆர்மோனியத்தின் மீதும் மாறா நம்பிக்கை இருந்தது அவருக்கு. யார் வந்தாலும் மொத்தப் பாட்டையும் ஹிட்டாக்கிக் கொடுக்கிற இளையராஜா, கிராமத்து சப்ஜெக்ட்டையும் கரகாட்டக்கார கதையையும் விட்டுவிடுவாரா? மொத்தப்பாட்டையும் லட்டு மாதிரி இனிக்க இனிக்கக் கொடுத்தார் இளையராஜா. ‘கோழி கூவுது’,’ எங்க ஊரு பாட்டுக்காரன்’ வரிசையில் மெகா வெற்றியாக சேர்ந்துகொண்டான் ‘கரகாட்டக்காரன்’.
கவுண்டமணி - செந்தில் ஜோடி, வெற்றி ஜோடியாக வலம் வந்த படங்கள் எத்தனையோ உண்டு. ஆனாலும், ‘கரகாட்டக்காரன்’ அவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டி ஆடுகிறான். இவர்கள் அடித்த லூட்டியில், கால் சலங்கையே குலுங்கிக்குலுங்கிச் சிரித்தது. வாழையடி வாழை என்றொரு வார்த்தை உண்டு. இதில் உள்ள வாழைப்பழ காமெடியும், வாழையடி வாழையாக வம்சம் வம்சமாக தழைத்துச் சிரிக்கவைக்கிற காமெடி என்றுதான் சொல்லவேண்டும். இன்னும் எத்தனை வருடங்களானாலும், டிக்டாக்கிலும் ட்விட்டரிலும் வாட்ஸ் அப்பிலும் டிரெண்டாகிக் கொண்டே இருக்கும், ‘அதாங்க இது’ வாழைப்பழ காமெடி. நகைச்சுவைப் பகுதி எழுதிய ஏ.வீரப்பனையும் மறப்பதற்கில்லை.
படத்தின் வெற்றிக்கு பலம் சேர்த்தவர்களில், சொப்பனசுந்தரியும் ஒருத்தி. இத்தனைக்கும், படத்தில், சொப்பனசுந்தரி என்று யாருமில்லை. எந்தக் கேரக்டரும் இல்லை. 16 ரீல் படத்தில், பத்துப் பதினைந்து இடங்களில் கூட, இந்தப் பெயர் வராது. ஒரேயொரு காட்சியில், ஒரேயொரு தடவைதான் ‘சொப்பனசுந்தரி’ என்று சொல்லப்பட்டிருக்கும். ஆனால், அந்த ஒற்றைப் பெயர், இன்று வரை வெகு பிரபலம். அந்தக் காட்சியை நினைத்து, சொப்பனத்தில் கூட ரசித்துச் சிரித்தார்கள் தமிழக மக்கள்.
கோவைத்தமிழ் பேசிய கோவை சரளா இந்தப் படத்தில் ‘என்னை காரைக்குடில கூப்பிட்டாக, கண்டமனூர்ல கூப்பிட்டாக’ என்று மதுரைத் தமிழ் பேசி, அலப்பறையைக் கொடுத்தார். ’அக்கா... அக்கா...’ என்று தன் நெஞ்சு தடவி சண்முகசுந்தரம் பேசும் வசனம், இன்றைக்கு வரை காமெடி ஷோக்களில் கைதட்டல் வாங்கப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.
படத்தின் டைட்டிலில், ‘இசை - இளையராஜா’ என்று வந்தாலே, விசில் பறக்கும். கைதட்டல் காது கிழிக்கும். ஆரவாரத்தில், ஒருநிமிடம் தியேட்டரே ஐந்தடி உயரம் சென்று குலுங்கிவிட்டு சகஜநிலைக்கு வரும். படத்தின் தொடக்கத்தில், இளையராஜாவே வருவார். ‘அண்ணே, நீங்கதாண்ணே இசையமைக்கணும். டைட்டில் ஸாங்கும் பாடணும்’ என்று கங்கை அமரன் சொல்ல, ‘பாட்டாலே புத்தி சொன்னார், பாட்டாலே பக்தி சொன்னார்’ என்று இளையராஜா பாட, டைட்டில் ஓட, அந்த ரெண்டரை மணி நேரப் படமும் ஓடுவது தெரியாமல் ஓட, படமும் எல்லாத் தியேட்டர்களிலும் 200 நாள், 300 நாள் என ஓடியதெல்லாம்... வரலாறு.
‘முந்தி முந்தி விநாயகனே’, ‘மாங்குயிலே பூங்குயிலே’, ‘குடகுமலை காற்றில்’, ‘இந்த மான் உந்தன் சொந்த மான்’, ‘ஊருவிட்டு ஊரு வந்து’ என்று எல்லாப் பாட்டுகளும் அதிரிபுதிரி ஹிட்டானது. தியேட்டரில் படம் வந்தால், முறுக்கு, கடலைமிட்டாய், கூல்டிரிங்ஸ் என்றெல்லாம் முன்னதாகவே வாங்கிவைப்பார்கள். ‘கரகாட்டக்காரன்’ ஓடிய தியேட்டர்களில் இன்னொன்றையும் மறக்காமல் தயாராக வைத்திருந்தார்கள். அது... வேப்பிலை.
ஆமாம்... க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் ‘மாரியம்மா மாரியம்மா’ பாட்டுக்கு, அங்கிருந்தும் இங்கிருந்துமாக பெண்களும் ஆண்களும் சாமியாடினார்கள். அவர்களை சாந்தப்படுத்த வேப்பிலையும் விபூதியும் தயாராக வைத்திருந்தார்கள் தியேட்டர்காரர்கள்.
அது கலைப்படமோ, மெசேஜ் படமோ எதுவாக இருந்தாலும் சரி... ‘கரகாட்டக்காரன்’ படத்தைப் புறக்கணித்துவிட்டு, தமிழ் சினிமாவின் சரித்திரத்தைச் சொல்லவேமுடியாது.
படத்தின் பட்ஜெட் 15 முதல் 19 லட்சத்துக்குள். ஆனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய லாபம்.
1989ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி வெளியானது ‘கரகாட்டக்காரன்’. படம் வெளியாகி இன்றுடன் 31 ஆண்டுகளாகின்றன.
இன்னும் எத்தனையெத்தனை ஆண்டுகளானாலும், கரகாட்டக்காரனையும் வாழைப்பழத்தையும் முக்கியமாக சொப்பனசுந்தரியையும் மறக்கவே முடியாது ரசிகர்களால்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT