Published : 15 Jun 2020 03:16 PM
Last Updated : 15 Jun 2020 03:16 PM

நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள் சுஷாந்த்: நடிகர் கார்த்திகேயாவின் உருக்கமான கடிதம்

தன்னுடைய வாழ்க்கைக்கு சுஷாந்த் எந்த அளவுக்கு உந்துதலாக இருந்தார் என்பதை விளக்கி நடிகர் கார்த்திகேயா கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் நேற்று (14.06.20) தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத்தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது. இந்நிலையில் சுஷாந்த் சிங் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மறைவுக்கு இந்தியத் திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக, நடிகர் கார்த்திகேயா நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"நான் வாராங்கல் நகரில் தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் படித்துக் கொண்டிருந்தபோது 'கை போ சே', 'ஷுத்தேஸி ரொமான்ஸ்' ஆகிய (சுஷாந்தின்) படங்கள் வெளியாயின. சுஷாந்த் டிசிஇ கல்லூரியில் பாதியில் படிப்பை விட்டவர். அது இந்தியாவில் முக்கியமான கல்வி நிறுவனங்களில் ஒன்று.

இந்திய அளவில் அதற்காக நடைபெற்ற பொறியியல் நுழைவுத்தேர்வில் சுஷாந்த் 7-வது இடத்தைப் (தேசிய அளவில்) பெற்றார். தனது பொறியியல் பட்டம் பெற ஒரு வருடம் இருக்கும்போது அவர் கல்லூரியிலிருந்து வெளியேறினார். இது தெரியவந்ததும் அவர் எனக்கு மிகப்பெரிய உந்துதலாக மாறினார்.

ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்திலிருந்து வந்த அவர் நடிகரானதை விட படிப்பைப் பாதியில்விட்டது மிகப்பெரிய விஷயம். அவரை நான் ஆதர்சமாக எடுத்துக் கொண்டாலும் எனக்குப் படிப்பை விடும் அளவு துணிச்சல் வரவில்லை.

எனது போராட்ட நாட்களிலும், அவர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள், அவரது நடனம், உடலை அவர் வைத்துக் கொண்ட விதம் என நான் அவரையே உந்துதலாக எடுத்துக்கொண்டேன்.

ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்திலிருந்து வந்து, கல்லூரியில் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு பாலிவுட்டின் நட்சத்திரமாக உயர்ந்திருக்க வேண்டுமென்றால் அவர் எவ்வளவு மன வலிமை பெற்றிருக்க வேண்டும் என்று நினைத்து அவரை மிகவும் பிடித்துப் போனதால் அவரது திரைப்படங்கள் எதையும் திரையரங்கில் பார்க்காமல் விட்டதில்லை.

எனக்கு மனவலிமை தந்தது, வாழ்க்கையில் நம்பிக்கை தந்தது, வாழ்க்கையில் நாம் எவ்வளவு நேர்மறையாக இருக்க வேண்டும் என்று காட்டியது எல்லாம் சுஷாந்த்தான். இப்போது அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று பார்க்கும்போது, நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள் சுஷாந்த். உங்களை ஆதர்சமாக நினைக்கும், உங்களிடமிருந்து உத்வேகம் பெறும் பலரை ஏமாற்றிவிட்டீர்கள்.

தோனி திரைப்படம் வெளியானபோது உங்களை உதாரணம் காட்டி நான் எனது அம்மாவுடன் சண்டையிட்டேன். இது நியாயமே இல்லை. தயவுசெய்து நடந்ததை மாற்றுங்கள்.

அவருக்கு நெருக்கமானவர்களுக்கும், அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்".

இவ்வாறு கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x