Published : 13 Jun 2020 06:32 PM
Last Updated : 13 Jun 2020 06:32 PM
எனக்குக் கிடைத்த பெயர், புகழில் பெரும்பங்கு கண்ணனுடையது என்று இயக்குநர் பாரதிராஜா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா இயக்கிய படங்களில் 'நிழல்கள்' தொடங்கி 'பொம்மலாட்டம்' வரை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் கண்ணன். 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார். அதில் சுமார் 40 படங்கள் பாரதிராஜாவின் படங்கள்தான். அவர் உடல்நலக் குறைவால் இன்று (ஜூன் 13) பிற்பகலில் காலமானார்.
தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவு குறித்து இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
"என்னுடன் பெரும்பகுதியைக் கழித்த, என் துணைவியாரைக் காட்டிலும் அதிகமாக நேசித்த ஒரு மகா ஒளிப்பதிவுக் கலைஞன் பி. கண்ணன். உங்களுக்குத் தெரியும். "நான் படப்பிடிப்புக்கு கேமராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனின் இரண்டு கண்களைத் தான் எடுத்துச் செல்கிறேன். அவருக்குத் தான் ஆகாயத்தின் மறுபக்கத்தையும் பார்க்கத் தெரியும்" என்று சொல்லியிருக்கிறேன். 40 ஆண்டு காலம் அவரோடு இணைந்து பணியாற்றி, இன்றளவும் என்னால் அவருடைய மறைவை நினைத்துப் பார்க்க முடியவில்லை.
இந்தக் கரோனாவால் அவருடைய உடலை நேரில் கூட தரிசிக்க முடியாத சூழலில் இருக்கிறேன். ஒரு அற்புதமான கலைஞனை நான் மட்டுமல்ல, இந்தக் கலையுலகம் இழந்துவிட்டது. 'என் உயிர்த் தோழன்' படம் ஒரு ஸ்லம் பின்னணி கொண்டது, 'நாடோடித் தென்றல்' ஒரு பீரியட் படம், 'காதல் ஓவியம்' ஒரு காவியம். அனைத்துக்குமே அதற்கான ஒளிப்பதிவைப் பண்ணியிருப்பான். அப்படியொரு வித்தை தெரிந்த தெளிவான ஒரு கலைஞன்.
என்னோடு 40 ஆண்டுகள் இருந்தான். இன்று இல்லை என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எனக்குக் கிடைத்த இந்தப் புகழ், மண் வாசனை, மக்கள் கலாச்சாரம் இதெல்லாம்தான் உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்தியது. அதில் கிடைத்த பெயர், புகழ் ஆகியவற்றில் பெரும்பங்கு என் கண்ணனுக்குத்தான் சேர வேண்டும். அவனுடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று ஒப்புக்காக எதுவும் சொல்ல முடியவில்லை.
அப்படியொரு ஆளை இழப்பேன் என்று நினைக்கவே இல்லை. இந்தக் கரோனாவினால் சிக்கித் தவித்து அவரைப் பார்க்க முடியாத சூழல். ஆகையால் இந்தத் துக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உலகத் தமிழர்கள் அத்தனை பேரும் இந்தக் கலாச்சாரத்தை, பண்பாட்டை ஒளிப்பதிவின் மூலம் உலகிற்குச் சொன்ன அற்புதமான கலைஞனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்க வேண்டுகிறேன்".
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT