Published : 13 Jun 2020 03:28 PM
Last Updated : 13 Jun 2020 03:28 PM

மூத்த ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார். அவருக்கு வயது 69.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா இயக்கிய படங்களில் 'நிழல்கள்' தொடங்கி 'பொம்மலாட்டம்' வரை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் கண்ணன். பாரதிராஜாவுக்கு மிக நெருங்கிய நண்பராகவும் வலம் வந்தார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது பலன் அளிக்காததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் பிற்பகல் 2 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது.

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 13) காலமானார். அவருக்கு வயது 69. இவர் இயக்குநர் பீம்சிங்கின் மகன், முன்னணி எடிட்டரான லெனினின் சகோதரர் ஆவார்.

தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே பாரதிராஜா - கண்ணனின் நட்பை அறிவார்கள். இவரை பலரும் 'பாரதிராஜாவின் கண்கள்' என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஏனென்றால் 50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். அதில் சுமார் 40 படங்கள் பாரதிராஜா இயக்கியதாகும்.

'அலைகள் ஓய்வதில்லை', 'டிக் டிக் டிக்', 'காதல் ஓவியம்', 'மண் வாசனை', 'முதல் மரியாதை', 'கடலோரக் கவிதைகள்', 'வேதம் புதிது', 'கிழக்குச் சீமையிலே' என பாரதிராஜா இயக்கிய படங்களுக்கு தன் ஒளிப்பதிவால் மெருகூட்டியவர் கண்ணன்.

பாரதிராஜா அளித்த பேட்டியொன்றில், "நான் படப்பிடிப்புக்குச் செல்லும்போது கேமராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனுடைய இரண்டு கண்களை மட்டும்தான் எடுத்துச் செல்வேன். அந்தக் கண்களுக்கு மட்டும்தான் ஆகாயத்தின் மறுபுறத்தையும் பார்க்கும் சக்தியுண்டு" என்று தெரிவித்துள்ளார். அந்த அளவுக்கு இருவருமே மிக நெருங்கிய நண்பர்கள்.

தந்தை பீம்சிங் இயக்கிய 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' என்ற படத்துக்கும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரது மனைவி பெயர் காஞ்சனா. மதுமதி மற்றும் ஜனனி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணன், இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார்.

கண்ணனின் உடல் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நாளை (ஜூன் 14) அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிகிறது.

ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவுக்கு, திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். அதேபோல், தன் நெருங்கிய நண்பரை இழந்துள்ள பாரதிராஜாவுக்கும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x