Published : 12 Jun 2020 04:51 PM
Last Updated : 12 Jun 2020 04:51 PM

நடன இயக்குநர் பிருந்தா  பிறந்த நாள் ஸ்பெஷல்: தேசியப் புகழ் பெற்ற டான்ஸ் மாஸ்டர்

இந்திய சினிமாவில் நடிப்பைத் தாண்டி அதிக பெண்கள் கோலோச்சும் துறைகள் ஒரு சில மட்டுமே. அவற்றில் முக்கியமானது நடன இயக்குநர் என்னும் துறை. இதிலும் முதலில் ஆண்களின் ஆதிக்கம் மட்டுமே இருந்தாலும் 1980கள் தொடங்கி பெண்களும் படிப்படியாக ‘மாஸ்டர்’ என்று உச்ச நட்சத்திரங்களாலும் மரியாதையுடன் அழைக்கப்படும் நிலைக்கு உயரத் தொடங்கினர். அவர்களில் முக்கியமானவரான நடன இயக்குநர் பிருந்தா இன்று (ஜூன் 12) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

பள்ளி நாட்களிலிருந்து நடனத்தில் தீவிர ஆர்வம் கொண்டிருந்த பிருந்தா பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். பரதநாட்டியம் உட்பட செவ்வியல் நடனக் குழுக்களில் அங்கம் வகித்திருக்கிறார். 13 வயது முதல் அவருடைய அக்கா கிரிஜாவின் கணவரும் புகழ்பெற்ற நடன இயக்குநருமான ரகுராம் மாஸ்டரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். இவருடைய இன்னொரு அக்காவான கலாவும் இன்று புகழ்பெற்ற நடன இயக்குநராகத் திகழ்கிறார்.

’இருவர்’ அளித்த திருப்புமுனை

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல படங்களில் உதவி நடன இயக்குநராகப் பணியாற்றியவருக்கு மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. பல காரணங்களுக்காக கவனம் பெற்ற அந்தப் படம் மிகவும் சவாலானதும்கூட.

தமிழ் சினிமா மற்றும் அரசியலின் ஒரு முக்கியமான காலகட்டத்தைத் திரையில் மீட்டுருவாக்கம் செய்த அந்தப் படத்தில் நடன இயக்குநராகப் பணியாற்றி தன் அசாத்திய திறமையை உலகுக்கு அறிவித்தார் பிருந்தா. ‘நறுமுகையே’, ’ஆயிரத்தில் நான் ஒருவன்’, ‘ஹல்லோ மிஸ்டர் எதிர்க்கட்சி’ என வேறுபட்ட சூழல்கள், பின்னணிகளைக் கொண்ட பாடல்களுக்கு சிறப்பாகவும் கச்சிதமாகவும் நடனத்தை வடிவமைத்திருந்தார்.

அதன் பிறகு இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக இன்றுவரை நீடிக்கும் மணிரத்னத்துடன் 10 படங்களில் பணியாற்றிவிட்டார். அவர் தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் பிரம்மாண்ட வரலாற்றுப் புனைவுத் திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் நடன இயக்குநராகப் பணியாற்றிவருகிறார்.

தேடிவந்த தேசியப் புகழ்

1998-ல் வேணு இயக்கத்தில் வெளியான ‘தயா’ என்னும் மலையாளப் படத்துக்கு சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார் பிருந்தா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் ஆமீர் கான், அக்‌ஷய் குமார் ஐஸ்வர்யா ராய், மோகன்லால், சிரஞ்சீவி உள்ளிட்ட மாற்றுமொழி நட்சத்திரங்களின் படங்களிலும் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். தமிழ். தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படத் துறைகளில் அதிகம் நாடப்படும் முன்னணி நடன இயக்குநராக இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் கோலோச்சிவருகிறார்.

முக்கியத்துவமும் தனித்தன்மையும்

நடன இயக்கம் என்னும் கலை அதிக கவனம் பெறாமல் இருந்த நிலையை மாற்றியவர்களில் பிருந்தா முக்கியமானவர். அவருடைய பெயரின் மூலமாகவே நடன இயக்குநர்களின் பணியின் முக்கியத்துவம் பொதுமக்கள் பலரைச் சென்றடைந்தது. பாடலின் சூழல், தேவையை மட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தின் முழுக் கதையையும் தெரிந்துகொண்டு நடனம் அமைத்தால்தான் நடனம் சிறப்பாக அமையும் என்று நம்பும் பிருந்தா அதையே பின்பற்றியும் வருகிறார். அவருடைய நடனங்கள் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருப்பதற்கு இதுவே முக்கியக் காரணம்.

அதேபோல் நட்சத்திரங்களின் திறமை குறை நிறைகளை அனுசரித்து அதற்கேற்றபடி நடன அமைப்புகளை வடிவமைப்பதிலும் அவருக்குத் தனி வல்லமை உண்டு. செவ்வியல் நடனத்தையும் மேற்கத்திய நடனத்தையும் கலப்பது புதிய நடன முறைகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடுவதில் அதிக நாட்டம் உடையவர். இவை எல்லாம் நடன இயக்குநர் பிருந்தாவின் தனித்தன்மைகள். இவையே அவற்றை தனித்துக் காண்பிக்கின்றன.

தற்போது பல படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றிவரும் பிருந்தா, வரும் ஆண்டு இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார். அவர் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த இந்தப் பிறந்த நாளில் மனதார வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x