Published : 10 Jun 2020 05:07 PM
Last Updated : 10 Jun 2020 05:07 PM
செவ்வாய்க்கிழமை அன்று தெலுங்கு திரையுலகினர் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இதே அணி தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ்வையும் சந்தித்திருந்தது.
இந்த சந்திப்புகளின் நோக்கம், கரோனா ஊரடங்கால் திரைத்துறை சந்தித்திருக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணவே என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த சந்திப்புகள் துறையில் இரண்டு பெரிய நாயகர்களுக்கு இடையே இருக்கும் பிரிவினையையே காட்டுகிறது. இதற்கு முன் துறையில் என்ன பிரச்சினை வந்தாலும் இயக்குநர், நடிகர் மற்றும் கதாசிரியர் தாசரி நாராயண ராவ் அதைத் தீர்த்து வைப்பார். அனைவருக்கும் அண்ணனைப் போல அவர் செயல்பட்டு வந்தார்.
அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் வார்த்தைகளை அனைவரும் மதித்து நடந்து வந்தனர். அவரது மறைவுக்குப் பின் அவரைப் போல ஒரு தலைமை இல்லாமல் தெலுங்கு திரைத்துறை பிளவுப்பட்டதாகக் கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பின் சிரஞ்சீவி அவரது இடத்தை நிரப்ப முயன்று கொண்டிருக்கிறார்.
சில கால அரசியல் வாசம், ஒன்றரை வருடத்துக்கு மேல் மத்திய அமைச்சர் பதவி என வகித்து வந்த சிரஞ்சீவி தற்போது தனது அரசியல் ஆசைகளை ஒதுக்கி வைத்து தெலுங்கு திரையுலகின் மூத்தவராக தன்னைக் காட்டுக் கொள்ள முயல்கிறார் பெரும்பாலானவர்களுக்கு இதில் பிரச்சினை இல்லை என்றாலும் இதற்கு எதிர்ப்பும் இருந்து வருகிறது.
தெலங்கானா தொழிலாளர் நலத்துறை அமைச்சரையும், முதல்வரையும் சிரஞ்சீவி தலைமையில் துறையினர் சிலர் சந்தித்துப் பேசினார். இது முன்னாள் ஆந்திர முதல்வரும், நடிகருமான என்.டி.ராமராவின் மகன் பாலகிருஷ்ணா தரப்பு அதிருப்தி அளித்துள்ளது. பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி இருவருமே ஒரே நேரத்தில் துறையில் வளர்ந்தவர்கள்.
இந்த சந்திப்புகளுக்குத் தன்னை அழைக்காதது குறித்து பாலகிருஷ்ணா கோபம் கொண்டார். மேலும் சிரஞ்சீவி மற்றும் அவருடன் இருந்த மற்றவர்கள் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை பாலகிருஷ்ணா முன்வைத்தார். இது சிரஞ்சீவி ரசிகர்களையும், சிரஞ்சீவி சகோதரர் நாகபாபுவையும் எரிச்சலூட்டியது.
இதற்கு நாகபாபு ஒரு காணொலி மூலம் பதிலடி கொடுத்தார். மேலும் தெலங்கானா முதல்வர் மற்றும் அரசாங்கத்திடம் பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், யார் நிலத்தை அபகரித்தது என்று சொன்னால் தெளிவாகும் என்றும் அதில் அவர் பேசியிருந்தது சர்ச்சையாகியது. இது பாலகிருஷ்ணாவின் மைத்துனர், முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவையே குறிப்பதாகப் பலர் கூறினர்.
ஒரு பக்கம் தயாரிப்பாளர் சி கல்யாண் இரு தரப்புக்கும் சமரசம் செய்ய முயன்றார். எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ஊடகங்களிடமும் தெரிவித்தார். ஆனால் இரு தரப்பு ரசிகர்களும் சமூக வலைதளத்தில் மோசமாக ஒருவரையொருவர் திட்டி, கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.
ஆனால் சுவாரசிய திருப்பமாக, தெலுங்கு திரையுலகினர், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனையும் சந்திக்க முடிவெடுத்தனர். ஆனால் இந்த சந்திப்புக்கு முன்வரை துறையைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே ஜெகன்மோகனுடன் பேசி வந்தனர். அவர் முதல்வர் ஆனபோது கூட யாரும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. எனவே அவரை சந்திக்க முடிவெடுத்ததே பலரை ஆச்சரியப்படுத்தியது. ஆனால் இந்த சந்திப்பை முன்னெடுத்தது சிரஞ்சீவியே. மேலும் இந்த சந்திப்புக்கு பாலகிருஷ்ணா அழைக்கப்பட்டார்.
இப்போது பாலகிருஷ்ணாவுக்கு சிக்கல் வந்தது. தன்னை அழைக்கவில்லை என்று அவரால் புகார் தெரிவிக்க முடியாது. அதே நேரம் அவர் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ என்பதால் அவரால் இந்த சந்திப்பிலும் கலந்து கொள்ள முடியாது.
இங்கு ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், ஒய்.எஸ் ஜெகன்மோகன் அவரது இளமை காலங்களில் பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகராகவும், பாலகிருஷ்ணாவின் ரசிகர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பிலும் இருந்தவர். இதனால் தான் 2004-ஆம் ஆண்டு நடந்து ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்திலிருந்து பாலகிருஷ்ணாவை ஜெகன் காப்பாற்றியதாகவும் நம்பப்படுகிறது.
புதன்கிழமை அன்று 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் பாலகிருஷ்ணா, அதையே சந்திப்புக்கு வராமல் இருக்க காரணமாகவும் ஆக்கிக் கொண்டார். சில விசேஷ பூஜைகளுக்குச் செல்ல வேண்டும் என்று கூறி ஜெகன் சந்திப்பை தவிர்த்தார்.
இந்த ஒட்டுமொத்த நடப்புகளுமே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துவதாக தெலுங்குத் திரையுலக நல விரும்பிகளும், நோக்கர்களும் கூறுகின்றனர். அதாவது தெலுங்குத் திரைத்துறையில் ஒற்றுமை என்பது ஒரு மாயை. சாதி அரசியல் இன்னும் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அரசியல் சார்புகள் முன்னிலை பெறுகின்றன. எல்லாவற்றையும் விட முக்கியமாக, கே.சி.ஆரோ, ஜெகனோ, அதிகாரத்தில் இருப்பவர்களின் நட்பு அனைவருக்கும் தேவைப்படுகிறது.
- பிரமோத் சதுர்வேதி, ஏ.என்.ஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment