Published : 10 Jun 2020 02:43 PM
Last Updated : 10 Jun 2020 02:43 PM
பாலகிருஷ்ணாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சிரஞ்சீவி.
சில தினங்களுக்கு முன்பு கரோனா நெருக்கடி காரணமாக தடைப்பட்டுள்ள தெலுங்குத் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை மீண்டும் எப்போது தொடங்கலாம் என்பது பற்றி நடிகர் சிரஞ்சீவியின் இல்லத்தில், பல்வேறு இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுடன், அரசுத் தரப்பு ஆலோசனை நடத்தியது. இந்தச் சந்திப்புக்கு நடிகர் பாலகிருஷ்ணா அழைக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து சிரஞ்சீவி - பாலகிருஷ்ணா இருவருக்கும் மோதல் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் பாலகிருஷ்ணா அளித்த பேட்டியில், "திரைக் கலைஞர்கள் சங்கம் ரூ.5 கோடி செலவில் கட்டிடம் கட்ட வேண்டும் என்று நினைத்தது. சிரஞ்சீவி உட்பட பல நடிகர்கள் அமெரிக்கா சென்று நிதி திரட்டினார்கள். என்னை அழைக்கவே இல்லை. அந்தத் திட்டம் என்ன ஆனது. அதுகுறித்து இது வரை எந்த முன்னேற்றமும் இல்லையே" என்று தெரிவித்தார்.
இன்று (ஜூன் 10) நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு 60-வது பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு பல்வேறு நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் பாலகிருஷ்ணாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சிரஞ்சீவி வாழ்த்து தெரிவிக்க மாட்டார் என பலரும் நினைத்தார்கள்.
ஆனால், அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக சிரஞ்சீவி தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
"60-வது வயதில் அடியெடுத்து வைக்கும் எங்கள் பாலகிருஷ்ணாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். இதே உற்சாகத்தோடு, ஆரோக்கியத்தோடு நூறாவது பிறந்த நாளையும் கொண்டாட வேண்டும் என்றும், எல்லோரது அபிமானமும் இதேபோல இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அன்பார்ந்த பாலகிருஷ்ணா, மாயஜாலமான 60-வது வயதில் நீங்கள் அடியெடுத்து வைக்கும் போது உங்களது அற்புதமான பயணத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள்".
இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்தின் மூலம் சிரஞ்சீவி - பாலகிருஷ்ணா இருவருக்குமான மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment