Published : 10 Jun 2020 01:29 PM
Last Updated : 10 Jun 2020 01:29 PM
ஜெ.அன்பழகன் மறைவை ஏற்க என் மனம் மறுக்கிறது என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 62. அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜெ.அன்பழகன் தயாரித்த 'ஆதிபகவன்' படத்தின் இயக்குநரான அமீர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"எனதருமை அண்ணனும் திமுக எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்கிற செய்தியைக் கேட்டறிந்த நாளில் இருந்தே மனம் வேதனைப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவரது மகன் ராஜா அன்பழகனிடம் அண்ணனின் உடல் நிலை குறித்து தொலைபேசியில் விசாரித்துக்கொண்டே இருந்தேன்.
இந்நிலையில் இன்று காலை அண்ணனின் மறைவுச் செய்தி குறித்து கேட்ட நிமிடம் முதல் இப்போது வரை அந்த உண்மைச் செய்தியை ஏற்க என் மனம் மறுக்கிறது. காரணம் அவரின் பழகும் தன்மை, நேர்மையான பேச்சு, அரசியலற்ற அன்பு, உண்மையைச் சொல்லும் துணிச்சல், எதிரே இருப்பவரின் இடத்தில் தன்னை நிறுத்திப் பார்த்து முடிவெடுக்கும் பண்பு...எனச் சொல்லிக்கொண்டே போகலாம் அவரிடம் நிறைந்திருந்த பல்வேறு குணாதிசயங்களை.
ஒரு அரசியல்வாதியுடன் சேர்ந்து படம் எடுப்பதா என்கிற என்னுடைய ஐயத்தை எங்கள் முதல் சந்திப்பிலேயே தகர்த்தெறிந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நட்பை வளர்த்து என் உள்ளத்தில் குடிபுகுந்து கொண்ட ஆளுமை அவர். ஒரு நல்ல தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக, தயாரிப்பாளர் சங்கத்தின் மீது அக்கறை கொண்டவராக, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற தொலைநோக்குச் சிந்தனை கொண்டவராக இப்படி பல கோணங்களில் அவரை நான் வெகு அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை இன்று நான் இழந்திருக்கிறேன் என்கிற வேதனையோடு மட்டுமல்லாமல் அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறவுகளின் உள்ளத்தில் சாந்தியையும் அவரது இறப்பிற்குப் பின் உள்ள வாழ்க்கையில் அமைதியையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்''.
இவ்வாறு இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT