Last Updated : 09 Jun, 2020 08:43 PM

 

Published : 09 Jun 2020 08:43 PM
Last Updated : 09 Jun 2020 08:43 PM

14 நாட்கள் கட்டாயத் தனிமைக் காலம்: பிரிட்டன் நாட்டு விதியிலிருந்து டாம் க்ரூஸ் தப்பியது எப்படி?

பிரிட்டன் நாட்டின் கட்டாயத் தனிமைக் காலம் விதியிலிருந்து தப்பிக்க அமெரிக்காவிலிருந்து 11 மணி நேரம் விமானத்தில் பயணப்பட்டு லண்டன் வந்தடைந்துள்ளார் நடிகர் டாம் க்ரூஸ்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான விதி அமலில் உள்ளது. பிரிட்டன் நாட்டைப் பொறுத்தவரை, வெளிநாட்டிலிருந்து யார் பிரிட்டனுக்கு வந்திறங்கினாலும் அவர்களுக்குத் தொற்று இருக்கிறதோ, இல்லையோ, கண்டிப்பாக 14 நாள் தனிமையிலிருந்தாக வேண்டும் என்ற விதி திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

ஏற்கெனவே கரோனா தொற்றின் காரணமாக வெனிஸ் நகரில் நடந்து கொண்டிருந்த 'மிஷன் இம்பாசிபிள் 7'-ம் பாகத்தின் படப்பிடிப்பு பிரிட்டனுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து பிரிட்டனில் நிலவிய ஊரடங்கால் படப்பிடிப்பு சில காலம் முடங்கியது. தற்போது அங்கு ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் திரைப்படப் படப்பிடிப்புகள் நடக்கின்றன.

மேலும் 'மிஷன் இம்பாசிபிள் 7' படக்குழுவினருக்கு கரோனா பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோர்ட்ஷையர் மாகாணத்தில் இருக்கும் ராயல் விமானப் படையின் முன்னாள் தளம் தற்காலிக கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. இதைக் கரோனா இல்லாத கிராமம் என்று படக்குழு குறிப்பிடுகிறது.

இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்ள டாம் க்ரூஸ் அமெரிக்காவிலிருந்து வரவேண்டியிருந்தது. ஆனால், திங்கட்கிழமை அவர் வந்திறங்கியிருந்தால் 14 நாட்கள் கட்டாயத் தனிமைக் காலத்தைக் கழிக்க வேண்டியிருந்திருக்கும். இதனால் படப்பிடிப்பு மேற்கொண்டு தள்ளிப் போயிருக்கும். எனவே இந்த விதியில் சிக்காமல் இருக்க அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் க்ளியர் வாட்டர் விமான நிலையத்திலிருந்து, பிரிட்டனில் லண்டனுக்குப் பக்கத்தில் இருக்கும் பிக்கின் ஹில் விமான நிலையத்துக்கு 11 நேர விமானப் பயணம் செய்து டாம் க்ரூஸ் வந்திறங்கினார். திங்கட்கிழமை விதி அமலுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே அவர் வந்து சேர்ந்ததால் அவரால் நேரடியாகப் படப்பிடிப்புக்குச் செல்ல முடியும்.

லண்டனில் ஒரு ஆடம்பர வீட்டில் டாம் க்ரூஸ் தங்கவிருக்கிறார். ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரில் இருக்கும் படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று வர அவர் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தவுள்ளார் என்றும் தெரிகிறது.

முன்னதாக ஜூலை 23, 2021 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படம், இந்தத் தாமதங்களால் நவம்பர் 19, 2021 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x