Published : 09 Jun 2020 12:49 PM
Last Updated : 09 Jun 2020 12:49 PM
கோவையில் ஏழை இஸ்லாமியர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் நசீர் என்ற ஜவுளிக்கடைச் சிப்பந்தியின் ஒரு நாள் வாழ்க்கைதான் ‘நசீர்’. கலைப்படங்கள் என்றாலே எல்லாம் மெதுவாக நடக்கும் என்ற எண்ணத்தை உறுதியாக்கும் வண்ணம் நசீரின் காலைப் பொழுது நிதானமாகத் தொடங்குகிறது. அவன் இந்தப் பூமியில் வசிக்கப் போகும், பார்க்கப் போகும் கடைசி காலைப் பொழுது என்பதை தொழுகைக்கு அழைப்பது போன்ற இசைமையுடன் அறைகூவல் சொல்லிவிடுகிறது.
புற்றுநோய் வந்த தாய், மூளைத்திறன் குறைந்த 12 வயது மகன், காதல் குறையாத மனைவி, ஒரு கடைச் சிப்பந்திக்கேயுரிய பொருளாதார அல்லல்கள் என இருக்கும் நசீர், கவிஞனும் கூட. ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளை ஞாபகப்படுத்தும் கவிதைகளை எழுதுபவர். செல்போன் காலத்திலும் ஊருக்கு மூன்று நாட்கள் செல்லும் மனைவிக்குக் கடிதம் எழுதுபவன். இஸ்லாமில் சொல்லப்பட்ட படி அந்த ஒண்டுக்குடித்தன வாழ்க்கையிலும் உடலை நன்கு சுத்தம் செய்துகொள்பவர், தொழுகைக்குச் செல்பவர். அவருக்கும் மதத்துக்கும் இடையில் வேறு எந்தத் தொடர்பும் இல்லை. அவன் இருக்கும் தெருவில் இஸ்லாமிய அரசியல் அமைப்பினர் பேசும் பேச்சு ஒலிப்பெருக்கியில் பின்னணியில் கேட்க, அந்த அமைப்பினர் செய்திருக்கும் சுவர் விளம்பரத்தையும் தாண்டித்தான் அவன், ஒரு இந்து முதலாளி நடத்தும் ஜவுளிக் கடைக்கு வேலைக்குச் செல்கிறார். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளும், இந்து மதத்தவர்கள் ஒன்றிணைய வேண்டுமென்கிற ஒலிப்பெருக்கிப் பேச்சு பின்னணியில் கேட்க, உறவினர் வீட்டு விசேஷத்துக்கு மல்லிகைப்பூ வாங்கிக் கொடுத்து பேருந்தேற்றி அனுப்பிவிட்டு, கடையைத் திறக்கப் போகிறார் நசீர்.
ஜவுளிக் கடையில் வேலை பார்க்கும் யுவதி செல்போனில் பேசியபடி உள்ளே வருகிறாள். இந்தப் படம் எத்தனை நாள் ஓடும் என்று கிண்டலாக நசீர் கேட்கிறார். ஒரு வாரம் ஓடுனா பெரிசு என்று அவள் பெருமூச்சுவிடுகிறாள். ஜவுளிக் கடையில் யார் பேசுகிறார் என்று தெரியாமல் ஒரு குரல், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முஸ்லிம் தெருவுக்குள் செல்ல வேண்டிய அவசியம் குறித்துப் பேசுகிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கடைக்குள் வியாபாரம் நடக்கிறது. பாட்டிகளுக்கு, சேலைகளை விரித்து விரித்துக் காண்பிக்கிறார் நசீர். கடை முதலாளியின் மகனுக்கு அவர் வீட்டுக்குப் போய் மதிய உணவு எடுத்துக் கொண்டு அவன் படிக்கும் பள்ளிக்கு மதியம் போகிறார் நசீர். ஒருபக்கம் மதம் சார்ந்த இறுக்கங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலையும் இன்னொரு பக்கத்தில் ஆண் - பெண் உறவுகள் செல்போன் வழியாக சகஜமாகிக் கொண்டே வருவதையும் இயக்குனர் பக்கவாட்டில் உறுத்தாமல் சேர்த்துக் காண்பிப்பதில் வெற்றிபெற்றிருக்கிறார். வறுமை, அன்றாடத்தின் அலுப்பு ஆகிய அழுத்தங்களுக்கு மத்தியில் காதலும் காமமும் எல்லாருக்கும் பகல் கனவாக, ஆறுதல் தரும் ஒன்றாக இருக்கிறது என்பதைக் காட்சிகள் வழியாகக் காண்பிக்கிறார்.
ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் முன்பணமாக நசீர் முதலாளியிடம் கேட்க, புறநகர்ப் பகுதியில் இருக்கும் கல்லூரி விடுதிக்கு ஐந்து ப்ளேசர்களைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு அதில் வரும் பணத்தை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார் முதலாளி. கல்லூரி மாணவர்களின் விடுதி வேறொரு உலகமாக இருக்கிறது. அங்கு நசீர் போன்ற ஏழைக்கு அத்தனை மரியாதை இல்லை.
தன் மனைவியிடம் மனத்தில் பேசிக்கொண்டபடியே கடைக்குத் திரும்புகிறார் நசீர். உக்கடத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கலவரம் தொடங்கிவிட்டதாகச் சொல்லப்பட கடையைச் சீக்கிரமே மூடிவிட்டு நசீர் மகனுக்கும் அம்மாவுக்கும் டிபன் பார்சல் வாங்கிக் கொண்டு திரும்பும் போது, கலவரக் காரர்களால் இஸ்லாமியன் என்று அடையாளம் காணப்பட்டு கொலை செய்யப்படுகிறார் நசீர். நசீரின் சடலம் தூரத்திலிருந்து காண்பிக்கப்பட்ட, படமும் நசீரின் அந்த நாளும் முடிவடைகிறது.
எல்லா சாமானியர்களையும் போலவே தன் வாழ்க்கையை அதற்கேயுரிய ஏக்கங்கள், சந்தோஷங்கள், அல்லல்களுடன் வாழும் ஒரு மனிதனை மதம் சார்ந்த அரசியல் எப்படி அவனது மத அடையாளம் காரணமாகப் பலியாக்குகிறது என்பதை வெற்றிகரமாக இப்படைப்பு சொல்லியிருக்கிறது.
‘நசீர்’ திரைப்படத்தின் காட்சி நகர்விலும் நடிகர்களின் அசைவிலும் ஒரு அமெச்சூர் தன்மை தெரிந்தாலும், ஒரு தமிழ் இஸ்லாமியக் குடும்பச் சூழலை, அதன் இன்றைய எதார்த்தத்தை தனது வரையறைகளுக்குட்பட்டே உருவாக்குவதில் இயக்குனர் வெற்றிகண்டுள்ளார். நசீருக்கும் அவனது மனைவிக்குமான அன்னியோன்யம் மிகச் சில நிமிடங்களில் உயிர்ப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. நசீர் கவிஞனாகவும் காதலனாகவும் இருந்து அவன் இறக்கும் போது பார்வையாளனிடம் அதனாலேயே கூடுதல் கனத்தை ஏற்படுத்துகிறது.
நசீர் அம்மாவின் பகல் உறக்கமும், நசீரின் மூளைத்திறன் குறைந்த மகனின் பகல் கனவில் அவன் வரைந்த ஓவியங்களும் வரும் காட்சியும் ஒண்டுக்குடித்தன வீட்டில் உள்ள பகல்நேரத் தனிமையின் சித்திரங்களும் ஒளிப்பதிவாளர் யார் என்று கேட்க வைக்கிறது. ஒரு பெட்டி போல இருக்கும் ஜவுளிக்கடையின் அன்றாடத்தை, அதில் வேலை பார்ப்பவர்களின் சிரமங்கள், குதூகலங்கள், கிளுகிளுப்புகள், பெருமூச்சுகளை 27 வயது இயக்குனர் அருண் கார்த்திக் நிதானமாகவும் சுவாரசியம் குன்றாமலும் காட்சிகளாக்கியுள்ளார்.
நசீராக நடித்திருக்கும் குமரன் வளவன் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சாதித்துள்ளார். நசீரின் மனைவியாக நடித்திருக்கும் சுதா ரகுநாதன், ஜவுளிக்கடையில் உள்ளாடை விற்கும் பெண் எல்லாரும் கவனத்தை ஈர்ப்பவர்கள். தமிழில் சிறந்த சிறுகதைகளை எழுதிய திலீப்குமாரின் ‘ஒரு குமாஸ்தாவின் கதை’க்கு ஒரு அழுத்தமான டெலிபிலிமின் அனுபவத்தை அருண் கார்த்திக் கொடுத்துள்ளார்.
இந்திய – டச்சு கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள நசீர் திரைப்படம், ‘வி ஆர் ஒன் குளோபல் பிலிம் பெஸ்டிவல்’-ல் திரையிடப்பட்டது. யூட்யூப்பில் பார்ப்பதற்குக் கிடைக்கிறது. ஒளிப்பதிவாளர் சவுமியானந்தா சாஹி, படத்தொகுப்பாளர் அர்க்ய பாசு ஆகியோரின் பணி படத்தில் தெரிகிறது. இஸ்லாமியக் கலாசார நினைவுகளை எழுப்பும் இசை படத்துக்குப் பலம் சேர்க்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT