Published : 07 Jun 2020 06:11 PM
Last Updated : 07 Jun 2020 06:11 PM
உயிர்மூச்சு இருக்கும் வரை அதிமுக-வில் தான் இருப்பேன் என்று இயக்குநர் ஷக்தி சிதம்பரம் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
'இங்கிலீஷ்காரன்', 'மகாநடிகன்', 'சார்லி சாப்ளின்' உள்ளிட்ட பல காமெடி படங்களை இயக்கி, தயாரித்தவர் ஷக்தி சிதம்பரம். தற்போது யோகி பாபு நாயகனாக நடிக்கும் 'பேய்மாமா' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவர் அதிமுக-வில் தலைமை கழக நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார். அந்தக் கட்சிக்கு ஆதரவாகத் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து பலரும் பாஜகவில் இணைந்துவிட்டார் ஷக்தி சிதம்பரம் என்று தகவலை பரப்பினார்கள். இது தொடர்பாக ஷக்தி சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
"பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது எடுத்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியானது எனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது; இந்த தகவல் முற்றிலும் தவறானது. நான் 'பேய்மாமா' படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவில் சில மாதங்கள் தங்கியிருந்த காரணத்தால் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.
கரோனா அச்சுறுத்தலால் எனது மறுப்பு அறிக்கையை வெளியிடவும் தாமதமானது. நான் எம்.ஜி.ஆர் அவர்களின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களின் கரங்களால் அதிமுக அடிப்படை உறுப்பினர் அட்டை பெற்றவன். தற்போது முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, எனது உயிர் மூச்சு இருக்கும் அவரை அதிமுக தொண்டனாகவே பணியாற்றுவேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு இயக்குநர் ஷக்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT