Published : 06 Jun 2020 06:35 PM
Last Updated : 06 Jun 2020 06:35 PM
கரோனா பாதிப்பால் மேடை நாடகம், திரையரங்குகள் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதால், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற ஸ்ட்ரீமிங் சேவை தளங்கள் உதவி செய்ய வேண்டும் என்று 'ஸ்கைஃபால்', '1917' படங்களின் இயக்குநர் சாம் மெண்டிஸ் வேண்டுகோள் வைத்துள்ளார்.
நாளிதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், "எங்களது சிறப்பான நடிப்பு, தயாரிப்பு, எழுத்து, இயக்கம் ஆகிய திறமைகளை வைத்து நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஸ்ட்ரீமிங் சேவை தளங்கள் பல கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளன. அதே நேரத்தில் எங்களின் அந்தத் திறமையை பட்டை தீட்ட உதவிய கலைப் பாரம்பரியத்தை அவர்கள் அழியவிட்டால் அது மிகப்பெரிய முரணாக இருக்கும்.
எனவே இதை நீங்கள் படித்துக் கொண்டிருப்பீர்களேயானால், கலை வெளியில் இருப்பவர்கள் உங்களுக்கான தீனியைத் தருபவர்கள் என்று மட்டும் நினைக்காமல் அனைவரையும் ஆதரிக்கும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு என்று நினைக்க வேண்டும்.
இரண்டாவது உலகப் போருக்குப் பின் பிரிட்டனின் கலாச்சார வாழ்க்கைக்கு வந்துள்ள மிகப்பெரிய சவால் இது. தேசத்தில் நாடகக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், இசை அரங்குகள், நடனக் கலைஞர்கள், நடன அரங்குகள் என அனைத்துக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இந்த அரங்குகள் உயிர் பெற ஒரு திட்டம் வேண்டும். நம்மிடம் ஒன்றும் இருக்கிறது என நம்புகிறேன்" என்று சாம் மெண்டிஸ் எழுதியுள்ளார்.
மேலும் கலைஞர்களுக்கு மானியம், பொழுதுபோக்குத் துறைக்கு விதிவிலக்கு, அரசே மேடை நாடகத் தயாரிப்புக்கு முதலீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட யோசனைகளையும் இந்தக் கட்டுரையில் சாம் மெண்டிஸ் உத்தேசித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT