Published : 02 Jun 2020 08:27 PM
Last Updated : 02 Jun 2020 08:27 PM

வரைந்தது அப்படியே திரையில்: 'பாகுபலி' அனுபவம் பகிரும் விஸ்வநாத் சுந்தரம்

தான் வரைந்த படம் அப்படியே திரையில் ராஜமெளலி கொண்டு வந்தது தொடர்பாக விஸ்வநாத் சுந்தரம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய படங்கள் உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றவையாகும். இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்டமான அரண்மனைகள், போர்க் காட்சிகள் என பார்வையாளர்களை இத்திரைப்படங்கள் பிரமிக்க வைத்தது.

இந்தப் படத்தில் காட்சி மேம்பாட்டுக் கலைஞராக பணிபுரிந்தவர் விஸ்வநாத் சுந்தரம். ராஜமெளலி ஒரு காட்சியைக் கூறினால் அந்தக் காட்சியை எப்படியெல்லாம் உருவாக்கலாம் என்று சிந்தித்துப் படமாக வரைந்துக் கொடுக்க வேண்டும். அதிலிருந்து மெருகேற்றி ராஜமெளலி படமாக்குவார். இவரது சில படங்கள் அப்படியே காட்சியாகவும் வந்துள்ளது.

பாகுபலியை கட்டப்பா முதுகில் குத்தும் காட்சிக்காக விஸ்வநாத் சுந்தரம் வரைந்து கொடுத்த படத்தை அப்படியே காட்சிப்படுத்தியிருந்தார் ராஜமெளலி. இது தொடர்பாக 'இந்து தமிழ் திசை' இன்ஸ்டாகிராம் நேரலையில் விஸ்வநாத் சுந்தரத்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

"ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பணிபுரிந்து கொண்டிருந்தோம். திடீரென்று ஒரு நாள் கம்யூட்டர் எல்லாம் எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று அழைத்தார்கள். ராஜமெளலி சார் ஒரு காட்சி சொன்னார். கட்டப்பா வந்து பாகுபலியை முதுகில் குத்துகிறார், இதற்கு படங்கள் வேண்டும் என்றார். உடனே அவர் ஏன் சார் குத்துகிறார் என்று கேட்டேன். இது தான் காட்சி வரையுங்கள் என்றார்.

இது தான் முதல் பாகத்தின் க்ளைமாக்ஸ், முக்கியமான காட்சி என்று எதுவுமே தெரியாது. மாமா என்று பாசமாக அழைப்பவரை முதுகில் குத்துகிறார் என்றால் முக்கியமான காட்சி என்று புரிந்து கொண்டேன். ராஜமெளலி சார் தனது மனதில் இருப்பதை அவ்வளவு எளிதாக வெளிப்படுத்திவிடமாட்டார். முதலில் தனக்கு முன்னால் இருப்பவர்களிடம் தனக்குத் தேவையானதை வருகிறதா என்று தான் பார்ப்பார்.

முதல் படத்தைப் பார்த்தவுடன், எனக்கு இதிலிருந்தும் விஷயங்கள் சரியாகப் புரியவில்லை என்றார். காமிக்ஸ் பாணியில் ஒன்று கொடுத்தேன். அதுவும் வேண்டாம் எனக் கூறிவிட்டார். இறுதியாகக் கொடுத்த படம் தான் நீங்கள் படத்தில் பார்ப்பது. தீ பின்னணியில் நான் வரைந்த படத்தை எடுத்துக் கொண்டு போய் ஒளிப்பதிவாளரிடம் காட்டினார். நான் என்ன வரைந்தேனோ அதை அப்படியே காட்சியாக வைத்தார்"

இவ்வாறு விஸ்வநாத் சுந்தரம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x