Published : 29 May 2020 12:08 PM
Last Updated : 29 May 2020 12:08 PM
படத்தயாரிப்பு மிகச் சவாலாக இருக்கப் போகிறது என்று ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இறுதிக்கட்டப் பணிகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. மேலும், சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதியளித்துவிட்டாலும், 50 பேர் வரை அனுமதிக்க வேண்டும் என்று சின்னத்திரை மற்றும் பெப்சி அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இனி வரும் காலம் எப்படி படப்பிடிப்பு நடத்துவது, தயாரிப்பைத் திட்டமிடுவது உள்ளிட்டவை குறித்து தயாரிப்பாளர்கள் ஆலோசித்து வருகிறார்கள். இதனிடையே 'பிகில்' படத்தைத் தயாரித்த ஏஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, இனி வரும் காலங்கள் படப்பிடிப்பு எப்படி திட்டமிடலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அர்ச்சனா கல்பாத்தி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
"இனி எல்லோரும் முன் தயாரிப்பு வேலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. ஒருவருக்குத் தொற்று இருந்தாலும் 3 வாரங்கள் படப்பிடிப்பு நடத்த முடியாது. படத் தயாரிப்பு என்பது மிக மிகச் சவாலான காரியமாக இருக்கப்போகிறது.
ஆனால் இதில் ஒரு நல்ல விஷயம், பெரிய பட்ஜெட் படம் என்று வரும்போது தயாரிப்பாளர்களின் கையில் கட்டுப்பாடு அதிகமாக இருக்கும். அனுபவமிக்க தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே இனி பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும். வெளிநாட்டில் படப்பிடிப்பு என்றால் கட்டாயமாக 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால் இனி படப்பிடிப்பு நாட்கள் அதிகமாகும்.
முகக் கவசங்கள், தனி மனித இடைவெளி கட்டாயமாகும். க்ரீன் மேட், கிராபிக்ஸ் பயன்பாடு அதிகரிக்கும். 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தின் போது ஒவ்வொரு ஷாட்டும் எப்படி எடுக்கப்படும் என்பது வரை திட்டமிட்டோம். அதை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.
ஒவ்வொருவரும் பரிசோதிக்கப்பட வேண்டும். படப்பிடிப்பு முடிந்து, தனிமை காலம் முடிந்துதான் அடுத்த படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டும். தயாரிப்பின் வேகம் கண்டிப்பாகக் குறையும். திரைக்கதைப் பணிகளை முடித்து எது தேவையோ அதை மட்டும் படம்பிடித்தால் நம்மால் சமாளிக்க முடியும். 200 நாட்கள் படப்பிடிப்பு எல்லாம் தேவைப்படாது. திட்டமிடுதல் தான் முக்கியம். உங்கள் குழுவுக்கு பாதுகாப்பான சூழலைத் தர முடியும் என்ற நம்பிக்கையை தர வேண்டும்"
இவ்வாறு அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT