Published : 28 May 2020 06:24 PM
Last Updated : 28 May 2020 06:24 PM
'சுப்பிரமணியபுரம்' படத்தில் ஜெய் கதாபாத்திரத்தில் நடிக்காதது ஏன் என்பதற்கான காரணத்தை சசிகுமார் தெரிவித்துள்ளார்.
2008-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வெளியான படம் 'சுப்பிரமணியபுரம்'. சசிகுமார் இயக்கி, நடித்து, தயாரித்திருந்தார். ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பில் உருவான இப்படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்தார்.
மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் பரமன் என்ற கதாபாத்திரத்தில் சசிகுமாரும், அழகர் என்ற கதாபாத்திரத்தில் ஜெய்யும் நடித்திருந்தனர். இந்தக் கரோனா ஊரடங்கில் ஆடை வடிவமைப்பாளர் சத்யாவுடன் சசிகுமார் நேரலைக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது சசிகுமாரிடம் சில பிரபலங்கள் கேள்வி எழுப்பினார்கள். அவர்களுக்கு சசிகுமார் பதில் அளித்தார்.
அப்போது ஆதவ் கண்ணதாசன், " 'சுப்பிரமணியபுரம்' படத்தில் ஜெய் கேரக்டரில் நீங்கள் நடிக்காமல் இன்னொரு கேரக்டரை எடுத்து நடித்தது ஏன்? காரணம் என்ன?" என்று சசிகுமாரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக சசிகுமார் கூறியிருப்பதாவது:
"முதலில் அந்தப் படத்தில் நான் நடிக்கிற மாதிரியே எண்ணமில்லை. கடைசி நேரத்தில்தான் நடிப்பதாக முடிவானது. ஜெய் கதாபாத்திரம் காதலிக்கும் காட்சிகள் எல்லாம் இருந்தன. பரமன் கதாபாத்திரம் எப்போதுமே சிடுசிடு என்று கோபமாக இருக்க வேண்டும். ஜெய் கேரக்டரில் நடித்தால் நாம் இயக்கத்தில் மாட்டிக் கொள்வோம் என நினைத்தேன்.
இயக்கும்போது கோபம், டென்ஷன் எல்லாம் இருக்கும். அந்தச் சமயத்தில் காதலிக்கும் காட்சியில் எப்படி நடிப்பது என யோசித்தேன். அதனால் தான் பாதுகாப்பாக பரமன் கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டேன். அதுமட்டுமல்ல, ஜெய் கேரக்டர் முதலிலேயே முடிவு பண்ணிட்டேன். பரமன் கேரக்டர் மட்டுமே முடிவாகாமல் இருந்தது. அதனால் அதில் நடித்ததும் இன்னொரு காரணம்".
இவ்வாறு சசிகுமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT