Published : 27 May 2020 11:31 AM
Last Updated : 27 May 2020 11:31 AM
கரோனா நெருக்கடியால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தேசிய அளவில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் புலம்பெயர்ந்த, மற்ற மாநிலங்களில் தினக்கூலியாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்து வசதி முடங்கியுள்ளதால் பலர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
‘சந்திரமுகி’, ஒஸ்தி', 'தேவி', 'அருந்ததி' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் சோனு சூட், மும்பையிலிருந்து கர்நாடகா செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பேருந்து ஏற்பாடு செய்து அவர்களை தானே முன்னின்று வழியனுப்பியும் வைத்தார்.
உத்தரப் பிரதேசத்தில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும் பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்தார் சோனு சூட்.
புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்ப பாலிவுட் நடிகர் சோனு சூட் போக்குவரத்து ஏற்பாடு செய்தார் என்ற செய்தி வந்ததிலிருந்தே அவரது சமூக வலைதளப் பக்கங்களில் எண்ணற்ற கோரிக்கைகள் குவிந்து வந்தன.
இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் உதவி கோர இலவச தொலைபேசி எண்களை அறிவித்துள்ளார் சோனு சூட். 18001213711 என்ற அந்த இலவச எண்ணைத் தொடர்பு கொள்ளும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சோனுவின் குழுவினர் உதவுவார்கள்.
இதுகுறித்து சோனு சூட் கூறியிருப்பதாவது:
''எனக்கு தினமும் ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. என் குடும்பத்தினரும் நண்பர்களும் அவர்களின் தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் பலரது பெயர்கள் விடுபட்டுப் போக வாய்ப்பு இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். எனவே இந்த கால் சென்டரைத் தொடங்க நாங்கள் தீர்மானித்தோம். இது ஒரு இலவச எண்.
இதற்காக அர்ப்பணிப்பு மிக்க ஒரு குழு பணிபுரிந்து வருகின்றது. எங்களைத் தொடர்புகொள்ளும் ஒவ்வொரு நபரைப் பற்றிய தகவல்களையும் விடுபடாமல் சேகரிக்கிறோம். எத்தனை பேருக்கு உதவ முடியும் என்று தெரியவில்லை. ஆனால் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம்''.
இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT