Published : 26 May 2020 07:04 PM
Last Updated : 26 May 2020 07:04 PM
தெருக்கூத்து கலைஞர்களின் நிலை குறித்தும், அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் 'வெங்காயம்' படத்தின் இயக்குநர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய அளவில் கரோனா அச்சுறுத்தலால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு துறைகளுக்கு நிவாரணத் தொகையை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து 'வெங்காயம்' படத்தின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"ஒருவருட ஊரடங்கு...
ஆம்.. மற்றவர்களுக்கெல்லாம் 2 மாதம் தான் ஊரடங்கு. ஆனால் தெருக்கூத்து கலைஞர்களுக்கு மட்டும் இந்த வருடம் முழுவதுமே ஊரடங்கு.
வழக்கமாக மாசி, பங்குனி, சித்திரை இந்த மூன்று மாதங்களை நம்பித்தான் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதாரம் இருந்து வந்தது. இந்த மூன்று மாதங்களில்தான் பெரும்பாலான திருவிழாக்களும் பொது நிகழ்ச்சிகளும் நடைபெற்றிருக்கும்.
ஆனால், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலகட்டம் சரியாக இந்த மூன்று மாதங்களாகவே போய்விட்டது.
தெருக்கூத்து கலைஞர்களுக்கு மட்டும்தான் பிரச்சினையா.. அனைத்து தொழில்களும் முடங்கிப்போய் தானே இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால் நாளையே ஊரடங்கு விலக்கப்பட்டாலும் அவரவர் தொழிலுக்குப் போகமுடியும். அந்த வார இறுதியிலோ அல்லது மாத இறுதியிலோ வேலைக்கான சம்பளத்தைப் பெறலாம்.
ஆனால் ,தெருக்கூத்து கலைஞர்கள் அடுத்த பங்குனி மாதம் வரை காத்திருந்தால் மட்டுமே அடுத்த தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெறும். அப்போதுதான் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும்.
வீடடங்கிக் கிடந்த இந்த மூன்று மாதத்தை நம்பி தான் ஒரு வருடத்தின் வாழ்வாதாரமே இருக்கிறது.
ஊர் உலகத்தையே விடிய விடிய மகிழ்வித்த கலைஞர்கள்... இன்று, இந்த ஒரு வருடத்தை எப்படி கடக்கப் போகிறோம் என்ற வேதனையில் மூழ்கி இருக்கிறார்கள்.
கிராமியக் கலைஞர்களின் நலவாரியத்தின் மூலம் வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை கிடைத்துக் கொண்டிருந்தது. அதனால் அனைத்து கலைஞர்களும் நலவாரியத்தில் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள். ஆனால் இப்போது வயது வேறுபாடின்றி அனைத்துக் கலைஞர்களுமே இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்கள்.
இந்நிலையைக் கருத்தில் கொண்டு அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு அனைத்து கலைஞர்களுக்கும் தமிழக அரசு தக்க நிவாரண உதவி வழங்க வேண்டும். இல்லாமல் போனால் கலைஞர்களும் அழிந்துபோவார்கள். கலையும் அழிந்துபோகும்".
இவ்வாறு இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT