Published : 25 May 2020 12:59 PM
Last Updated : 25 May 2020 12:59 PM

சிங்கம்பட்டி ராஜா மறைவு: சிவகார்த்திகேயன் இரங்கல்

சிங்கம்பட்டி ராஜா முருகதாஸ் தீர்த்தபதி மறைவுக்கு சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பக்கத்தில் உள்ளது சிங்கம்பட்டி ஜமீன். இதில் 31-வது ராஜவாக இருந்து வந்தவர் முருகதாஸ் தீர்த்தபதி. 1936-ம் ஆண்டு தந்தை சங்கர தீர்த்தபதி மறைவுக்குப் பிறகு 6 வயதில் முருகதாஸ் தீர்த்தபதிக்கு முடிசூட்டப்பட்டது.

இந்தியாவில் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டதற்கு முன்பே முருகதாஸ் தீர்த்தபதி பதவி ஏற்றுவிட்டதால், இவர் தான் கடைசி ராஜா என்று கூறப்படுகிறது. ஜமீன் முறை ஒழிக்கப்பட்டாலும், அந்த ஊர் மக்கள் ராஜாவிற்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்தே வந்தனர்.

முருகதாஸ் தீர்த்தபதி வயது முதிர்வின் காரணமாக தனது 89-வது வயதில் காலமானார். அவரின் மறைவு சிங்கம்பட்டி ஜமீன் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கரோனா அச்சுறுத்தல் சமயம் என்பதால் பெரிய அளவிலான மக்கள் கூட்டமும் கூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சிங்கம்பட்டி ராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்தே, 'சீமராஜா' என்ற படம் உருவானது. பொன்ராம் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சூரி, நெப்போலியன், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தற்போது முருகதாஸ் தீர்த்தபதி மறைவுக்கு சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பதிவில், "சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா. அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்,சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பொன்ராம் தனது சமூக வலைதளப் பதிவில், "ஜமீன் ராஜா மட்டும் அல்ல, தமிழ் இலக்கியவாதி, பண்பானவர். இவர் பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும் சிங்கம்பட்டி ஊர் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

முருகதாஸ் தீர்த்தபதி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x