Published : 25 May 2020 12:50 PM
Last Updated : 25 May 2020 12:50 PM
தமிழ் சினிமாவின் இன்றைய தலைமுறை நடிகர்களின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் கார்த்திக்கு இன்று (மே 25) பிறந்த நாள்.
அசத்தல் அறிமுகம்
இன்று பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்த பல வெற்றிப் படங்களைக் கொடுத்த கதாநாயக நடிகராகத் திகழும் கார்த்தியின் திரையுலக அறிமுகமே அமோகமாக இருந்தது. நடிகர் சிவகுமாரின் மகனும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி அமீர் இயக்கத்தில் 2007-ல் வெளியான ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். முதல் படமே மிகப் பெரிய வெற்றிப் படமாகவும் விமர்சகர்கள், ரசிகர்களால் பெரிதும் பாராடப்பட்ட படமாகவும் அமைந்தது. மாற்று சினிமா ஆர்வலர்கள், இலக்கியவாதிகளால்கூட அந்தத் திரைப்படம் பாராட்டப்பட்டது. ஏனென்றால் கிராமிய வாழ்க்கையை அசலாகப் பதிவு செய்தது ’பருத்திவீரன்’. அதில் சண்டித்தனம் செய்து திரியும் வீரமும் ஈரமும் நிறைந்த இளைஞனாக மிகச் சிறப்பாக நடித்திருந்தார் கார்த்தி. அறிமுக நடிகர் என்ற எந்த அடையாளமும் தெரியவில்லை. முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் தமிழக அரசின் சிறப்பு விருதையும் பெற்றார்.
மறக்கமுடியாத ஒருவன்
அடுத்ததாக ரசிகர்களின் பெரும் மதிப்பைப் பெற்ற இயக்குநர் செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற வரலாற்றை மையமாகக் கொண்ட ஃபேன்டஸி திரைப்படத்தில் நடித்தார். முதல் படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்தவர் இந்தப் படத்தில் நகர்ப்புற ஏழைத் தொழிலாளி கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தினார். இந்தப் படம் வணிக வெற்றியப் பெறவில்லை என்றாலும் மிகவும் மாறுபட்ட பரிசோதனை முயற்சி என்ற வகையில் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களில் ஒரு பிரிவினரால் இன்றும் பாராட்டப்படுகிறது. Recall value அதிகமுள்ள படமாக உள்ளது. அந்த வகையில் கார்த்தியின் திரைவாழ்வில் இரண்டாம் படமும் முக்கியமானதாக அமைந்தது.
கமர்ஷியல் பாதை
அடுத்ததாக லிங்குசாமி இயக்கிய ‘பையா’ கார்த்தி நடித்த முதல் பக்கா கமர்ஷியல் படம். தமிழ் சினிமாவில் மிக அரிதாகப் பயன்படுத்தப்பட்ட ‘ரோட் மூவி’ வகையைச் சேர்ந்த படம். படத்தின் பெரும்பகுதி சாலைப் பயணத்தில்தான். அழகான காதல் காட்சிகள், பரபரப்பான ஆக்ஷன் காட்சிகள், இளம் ஜோடிகளான கார்த்தி-தமன்னா கெமிஸ்ட்ரி, யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான பாடல்கள் ஆகியவற்றால் ‘பையா’ பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி கார்த்தியை கமர்ஷியல் கதாநாயகனாக நிலைநிறுத்தியது.
அடுத்தடுத்து சுசீந்திரனின் ‘நான் மகான் அல்ல’, சிவாவின் ‘சிறுத்தை’ ஆகிய வெற்றிப் படங்கள் கார்த்திக்கு அமைந்தன. இந்த இரண்டு படங்களிலும் ஆக்ஷன், மாஸ், ரொமான்ஸ் காட்சிகளில் மட்டுமல்லாமல் காமெடி,. சென்டிமென்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தார் கார்த்தி. குறிப்பாக நகைச்சுவைக் காட்சிகளில் சிறப்பாக வெளிப்படக் கூடிய நாயக நடிகர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார்.
முதல் அரசியல் படம்
இதைத் தொடர்ந்து வெற்றி, தோல்வி என மாறி மாறி வந்துகொண்டிருந்த நிலையில் பா.இரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ கார்த்தியின் திரைவாழ்வில் இன்னொரு முக்கியமான படமாக அமைந்தது. சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள மக்களுக்கான அரசியலை வெகு சிறப்பான சினிமா மொழியுடனும் வெகுஜனக் கலைவடிவங்களுக்குத் தேவையான ஜனரஞ்சக அம்சங்களுடனும் பேசிய இந்தத் திரைப்படத்தில் கல்வியின் மூலம் முன்னேற்றம் கண்ட ஹவுசிங் போர்ட் குடியிருப்பு வாழ் இளைஞனாக மிகச் சிறப்பாக நடித்திருந்தார் கார்த்தி.
நகைச்சுவை நாயகனும் கொடூர வில்லனும்
2016-ல் ‘தோழா’/’ஊபிரி’ தமிழ்-தெலுங்கு இரட்டை மொழிப் படத்தில் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்து தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதே ஆண்டு வெளியான ‘காஷ்மோரா’ படத்தில் நாயகன், வில்லன் என இரட்டை வேடங்களில் மூன்றுவிதமான தோற்றங்களில் நடித்தார். அந்தப் படத்தின் முதல் பாதியை தன் நகைச்சுவை கலந்த நடிப்பால் சுமந்து நின்றார். இரண்டாம் பாதியில் வில்லத்தனம் மிக்க அரசனாக மொட்டைத் தலை, தாடியுடன் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தார்.
’காற்று வெளியிடை’ படத்தின் மூலம் இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். நடிகராவதற்கு முன்பு வெளிநாடு சென்று திரைப்படங்கள் தொடர்பான கல்வியில் பட்டம் பெற்றவரான கார்த்தி இந்தியா வந்தவுடன் ‘ஆயுத எழுத்து’ படத்தில் மணிரத்னத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 'காற்று வெளியிடை' படத்தில் போர் விமானியாக நடித்திருந்தார்.
ஹெச்.வினோத் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் வீரமும் விவேகமும் நிறைந்த காவல்துறை அதிகாரியக் சிறப்பாக நடித்திருந்தார். காவல்துறை அதிகாரிக்குரிய உடலமைப்பு, உடல்மொழி என கதாபாத்திரமாகவே உருமாறினார். அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கிய ‘கடைக்குட்டி சிங்கம் ‘ படத்தில் நிறைய அக்காக்களையும் அக்கா மகள்களையும் கொண்ட பெருங்குடும்பத்தைச் சேர்ந்த விவசாயியாக நடித்தார். அந்தப் படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று ஏ,பி,சி என அனைத்து சென்டர்களிலும் கார்த்தியின் நட்சத்திர மதிப்பை மீண்டும் நிலைநாட்டியது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கைதி' படம் அனைத்துத் தரப்பு மக்களையும் மகிழ்வித்தது. நாயகி இல்லை, பாடல்கள் இல்லை என்றாலும் அதிலும் துணிச்சலாக நடித்திருந்தார் கார்த்தி
வாழும் வந்தியத்தேவன்?
தற்போது மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துவருகிறார் கார்த்தி. கல்கி எழுதிய சாகா வரம்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவல் படமாவது தமிழர்கள் பலரின் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று. அப்படி ஒரு படத்தில் கார்த்தியைப் போன்ற திறமையான நடிகர் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்குக் கூடுதல் ஆனந்தம்தான். படத்தில் யார் எந்த வேடத்தில் நடிக்கிறார்கள் என்பது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்துக்குத்தான் கார்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்று ஊகிக்க முடிகிறது. ஏனென்றால் வீரமும் துடுக்குத்தனமும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் பேச்சு சாதுரியமும் நிறைந்த வந்தியத்தேவன் கதாபாத்திரத்துக்கு கார்த்திதான் மிகப் பொருத்தமான தேர்வு.
தனித்தன்மைகள் மிக்க நாயகன்
இளமையான தோற்றத்தைத் தக்கவைப்பது, நடிப்பு, ரொமான்ஸ், நகைச்சுவை, நடனம், சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னை மெருகேற்றிக்கொள்வது ஆகியவற்றின் மூலமாகவே கதாநாயக நடிகர்கள் நிலையான இடத்தைப் பிடிக்க முடியும். ஆனால் மிகச் சில நடிகர்கள் அவற்றையும் தாண்டி பல விதமான பின்னணியிலிருந்து வரும் கதாபாத்திரங்களில் நடிப்பது, உருவ அமைப்பு, உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் அந்தக் கதாபாத்திரமாக உருமாறுவதற்கான கூடுதல் மெனக்கெடல்களைத் தந்து ரசிகர்களின் மனங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுவிடுவார்கள். அப்படிப்பட்ட சிலரில் கார்த்தியும் ஒருவர்.
அசாத்தியமான நகைச்சுவை உணர்வு, சண்டைக் காட்சிகளுக்குப் பொருத்தமான உடலமைப்பு, ரொமான்ஸ் காட்சிகளுக்குத் தேவையான இளமை, சென்டிமென்ட் காட்சிகளில் இயல்பாக நடிப்பது என அனைத்து வகையிலும் சிறப்பான கதாநாயகனாக இருப்பதோடு இந்த உருமாறும் கலையிலும் அபாரத் தேர்ச்சி பெற்றிருக்கிறார் கார்த்தி. கிராமம், நகரம் என வெவ்வேறு நிலப் பகுதிகள் போலீஸ் அதிகாரி, திருடன், ரவுடி, விவசாயி என வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட கதாபாத்திரங்களைத் தேடித் தேடி நடிக்கிறார். அவற்றுக்கு தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து ரசிக்கவைத்துவிடுகிறார். இந்தச் சிறப்பு குணங்களால்தான் கார்த்தி ஒரு நாயகனாக மட்டுமல்லாமல் நடிகராகவும் அனைவருக்கும் பிடிக்கிறது.
இத்தனை சிறப்புகளைக் கொண்ட கார்த்தி இன்னும் பல வெற்றிப் படங்களில் நடித்து மென்மேலும் புகழடைய வேண்டும் என்று இந்தப் பிறந்த நாளில் அவரை மனதார வாழ்த்துவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT