Published : 24 May 2020 10:58 AM
Last Updated : 24 May 2020 10:58 AM

கரோனா விழிப்புணர்வு: அரசு விளம்பரப் படங்களை இயக்கும் 'கட்டில்' திரைப்பட இயக்குநர்

தமிழக அரசு மக்களிடம் கரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதி தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழலில், அதற்கான விழிப்புணர்வு விளம்பரப் படங்களையும் எடுத்து வருகிறது. அந்த வரிசையில் 'கட்டில்' திரைப்படத்தை இயக்கியுள்ள இ.வி.கணேஷ்பாபு சில கரோனா விழிப்புணர்வு விளம்பரப்படங்களை இயக்கி வருகிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ''கரோனா விழிப்புணர்வு விளம்பரப்படங்களை இயக்க வாய்ப்பளித்த தமிழக அரசுக்கு நன்றி. தொலைக்காட்சி மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைந்து கொண்டிருக்கும் இப்படிப்பட்ட விழிப்புணர்வு விளம்பரங்களை இயக்குவதில் பெருமைப்படுகிறேன்.

நடிகர் மனோபாலாவை வைத்து நான் இயக்கிய விளம்பரப் படம் தற்போது பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு நமது தமிழகத்தின் கரோனா விழிப்புணர்வை உலகம் முழுக்கக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது. மேலும் திரைப்பிரபலங்களை வைத்தும் சில அரசு விளம்பரப்படங்களை இயக்கி வருகிறேன். விழிப்புணர்வை சீரியஸாக மட்டுமல்ல நகைச்சுவையாகவும் சொல்ல முடியும் என்பதை நான் இந்த படங்களை இயக்கும்போது செழியன் குமாரசாமி மூலமாக கற்றுக் கொண்டேன்'' என்றார் 'கட்டில்' திரைப்பட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு.

இ.வி.கணேஷ்பாபு நடித்து இயக்கியுள்ள 'கட்டில்' திரைப்படத்தில் சிருஷ்டி டாங்கே நாயகியாக நடித்துள்ளார். எடிட்டர் லெனினின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியர் ஷ்யாம், கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இயக்குநர் கணேஷ்பாபு தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இவர் ஏற்கெனவே 'யமுனா' படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x