Published : 22 May 2020 12:19 PM
Last Updated : 22 May 2020 12:19 PM

சதவீத அடிப்படையில் சம்பளம்: தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சி

சதவீத அடிப்படையில் நடிகர்களுக்கு சம்பளம் கொடுத்து, தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகில் நீண்ட நாட்களாகவே நடிகர்கள் உள்ளிட்ட அனைவரும் சதவீத அடிப்படையில் சம்பளம் வாங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. தற்போது இந்தக் கரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தவுடன், தமிழ்த் திரையுலகின் நிலை குறித்து பலரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

படங்கள் நேரடியாக ஓடிடி ப்ளாட்பார்மில் வெளியாவது குறித்து விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். இதனிடையே, தற்போது மீண்டும் சதவீத அடிப்படை சம்பள முறையில் புதிய படமொன்று தயாராகவுள்ளது.

இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"திரையுலகில் 50 ஆண்டு காலம் அனுபவமுள்ள பிரமிட் நடராஜன், இந்தக் கரோனா காலத்தில் திரையுலகிற்கு நாம் எல்லாம் ஏதாவது ஒன்று பண்ணலாம் என்று கேட்டார். சில ஐடியாக்கள் அவர் சொன்னவுடன், எனக்கு மனதில் தோன்றியது ஆர்.பி.செளத்ரி சார் தான். ஏனென்றால், அவர் அனைத்துவிதமான புதுமைகளையும் சினிமாவில் புகுத்தியவர். சினிமாவில் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்திய ஜாம்பவான். அவரிடம் பேசினேன். இதுவரைக்கும் தமிழ் சினிமா வேறு மாதிரி இருந்தது. இந்தக் கரோனா காலத்தில் ஏதேனும் ஒன்று பண்ணலாம் சார் என்றேன். பிரமிட் நடராஜன் சார் சில ஐடியாக்கள் சொன்னார் என்றேன்.

தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், இயக்குநர்களுக்கு சதவீத அடிப்படையில் சம்பளம் கொடுக்க ஒரு முயற்சி பண்ணலாம் என்று சொன்னேன். செய்யலாமே என்று செளத்ரி சார் சொன்னார். முதலில் சில இயக்குநர்களிடம் பேசுவோம் என்று கூறினேன். உடனே பிரமிட் நடராஜன் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் பேசினார். சினிமாவில் இவ்வளவு காலம் இருந்துவிட்டேன், ஏதாவது புதுமையாக பண்ணுவதற்கு முயற்சி பண்ணுகிறீர்கள். அதுவும் செளத்ரி சார் சொல்லிவிட்டார் என்றால் கண்டிப்பாக இந்த முயற்சிக்கு ஒப்புக் கொள்கிறேன் என்றார்.

உடனே, தாடி வெங்கட் ஒரு அருமையான கதையை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் சொன்னார். இயக்குநருக்கு அந்தக் கதை ரொம்பப் பிடித்துவிட்டது. செளத்ரி சாருக்குப் பிடித்துவிட்டது. சினிமாவில் கதைதான் நாயகன். இந்தக் கதையில் அனைத்து நாயகர்களும் இருப்பது மாதிரி இருக்கு என்று பேசினேன். கதையின் முக்கியக் கதாபாத்திரத்தில் சத்யராஜை நடிக்க வைக்கலாம் என்று பேசினோம். அவரும் சதவீத அடிப்படையில் சம்பளம் வாங்க ஒப்புக்கொண்டார். இந்தக் கதையில் முக்கியமான கவுரவத் தோற்றத்தில் பார்த்திபன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடிக்க ஒப்புக் கொண்டார்கள். இன்னும் சில நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஏனென்றால், இந்தப் படத்தில் நிறைய நடிகர்கள் இருக்கும் அற்புதமான கதை. ஓரளவுக்குப் படத்தை வடிவமைத்தோம். இந்தப் படத்தை எவ்வளவு நாளில் படப்பிடிப்பு முடிக்க முடியும் என்று கேட்டபோது, கண்டிப்பாக 20-25 நாட்களில் முடிக்க முடியும் என்றார். 30 நாளில் மொத்தப் படத்தையும் முடிக்க முடிவு செய்தோம். இந்தப் படத்தின் லாபத்தில் நடிகர்களுக்குச் சம்பளமில்லை. வியாபாரத்தில் சம்பளம். ஆகவே, அனைவருக்கும் உறுதியாக சம்பளம் உண்டு. எவ்வளவு என்பதுதான் வியாபாரத்தின் அடிப்படையில் முடிவு. ரூ.10 கோடிக்கு வியாபாரம் என்றால், இயக்குநர் 1% என்றால் ரூ.1 கோடி சம்பளம், நடிகருக்கு 2% என்றால் ரூ.2 கோடி சம்பளம்.

தயாரிப்புச் செலவு எவ்வளவு என்று பேசும் போது, ரூ.1 கோடியிலிருந்து ரூ.1.5 கோடியில் முடித்துவிடலாம் என்று கணக்கிட்டுள்ளோம். இதை இயக்குநரிடம் பேசவேண்டும். 2 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தப் படத்தை எடுக்க வேண்டும். நான் ஆரம்பத்திலிருந்தே தயாரிப்பில் ஈடுபட்டதே இல்லை. எனக்கு ஆர்வமில்லை. 40 ஆண்டு காலமாக நானும் செளத்ரி சாரும் நண்பர்களாக இருக்கிறோம். இப்போது இருவருக்குமே வேலையில்லை. அவரும், நானும் பெரிதாக எதிலும் தலையிட்டுக் கொண்டதில்லை. ஏனென்றால், அனைத்தையும் பசங்க பார்த்துக் கொள்கிறார்கள். இருவரும் உட்கார்ந்து இந்த வேலையைச் செய்ய முடிவெடுத்தோம்.

அப்போது எனக்குத் தயாரிப்பைப் பற்றி எதுவும் தெரியாது. கதை கேட்பது உள்ளிட்ட அனைத்தையும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரோ கணக்குகள் அனைத்தும் நீங்கள் பாருங்கள் என்றார். உடனே அனைத்துப் பணப் பரிமாற்றமும் வெள்ளையில்தான் என்றோம். 1000 ரூபாய் சம்பளம் கொடுத்தாலும், 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் காசோலையில்தான் கொடுப்பேன். தாராளமாகச் செய்யலாம் என்றார்.

இப்போது படத்துக்கு முதலீடு 2 கோடி ரூபாய் வேண்டும். ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் போட சக்தி கொடுத்துள்ளார். ஆனால், நண்பர்கள் என்ன சொன்னார்கள் என்றால் 2 கோடி ரூபாய் என்பதை 200 ஷேராக வைத்துக் கொள்வோம். ஒரு ஷேருக்கு ஒரு லட்ச ரூபாய் என்று முடிவு செய்தோம். 200 பேரில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பைனான்சியர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பங்கெடுக்கலாம். 150 ஷேர் மட்டுமே எடுக்கப்பட்டது என்றால், மீதமுள்ள 50 ஷேரை நானும், செளத்ரி சாரும் பிரித்துக் கொள்கிறோம். யாருமே எடுக்க முன்வரவில்லை என்றால், நாங்களே 100 ஷேர் எனப் பிரித்துக் கொள்கிறோம்.

திரையுலகில் ஏதேனும் புதுமை செய்யலாம் என்றே பிரித்துள்ளோம். ஒரு நபருக்கு 10 ஷேர் வரை தர முடிவு செய்துள்ளோம். இந்த ஷேர் தொடர்பாக யார் வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம். யாருமே வரவில்லை என்றாலும் நாங்கள் இருவரும் படம் பண்ண முடிவு செய்துவிட்டோம். அதிகபட்சம் 60 நாளில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். திரையரங்குகளுக்கு மட்டுமே இந்தப் படம். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி முடிந்தவுடன் தான் ஓடிடியில் வெளியாகும். அதற்கு முன்பு எதிலுமே வெளியாகாது.

பார்த்திபன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் கவுரவத் தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டமைக்கு நன்றி. இதர சில நடிகர்களும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். பிரமிட் நடராஜன் சார் தான் தயாரிப்பை வடிவமைக்கவுள்ளார். செளத்ரி சார் தலைமையில்தான் இந்தத் தயாரிப்பு நடக்கப் போகிறது. இந்தப் படத்தின் கணக்கு வழக்குகள் அனைத்துமே வெளிப்படையாக இருக்கும். கணினி வழி டிக்கெட் விற்பனை திரையரங்குகளில் மட்டுமே இந்தப் படம் திரையிடப்படும்.

சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்தில் ஒரு சர்வர் நிறுவப்படும். அதில் எந்தத் திரையரங்குகளில் யார் டிக்கெட் வாங்கினாலும் சர்வரில் வந்துவிடும். அப்போதே எத்தனை ரசிகர்கள் படம் பார்க்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொள்ளலாம். முழுக்க நேர்மையான முறையில் இந்தப் படத்தை எடுத்து, வெளியிட முடிவு செய்துள்ளோம்.

இனிமேல் நடிகர்கள், பெரிய இயக்குநர்கள் சதவீத அடிப்படையில்தான் சம்பளம் வாங்க வேண்டும். வியாபாரத்தை அனுசரித்து வாங்கினார்கள் என்றால் அனைவருமே நன்றாக இருக்க முடியும். இதை ஆரம்பித்து வைத்தவர் ரஜினிகாந்த். 'அண்ணாமலை' படத்துக்கு வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு விநியோக உரிமையை மட்டுமே சம்பளமாக வாங்கிக் கொண்டார். அந்த முறை தொடர்ந்திருந்தால் தமிழ் சினிமா எங்கேயோ போயிருக்கும். மீண்டும் அந்த முறையைத் தொடங்கி வைப்போம்".

இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x