Published : 19 May 2020 04:58 PM
Last Updated : 19 May 2020 04:58 PM

‘குஷி’ வெளியாகி 20 ஆண்டுகள்: ஈகோவை வெல்லும் காதலின் கதை

தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான காதல் திரைப்படங்கள் வந்துள்ளன. அவற்றில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவை நூறாவது இருக்கும். அந்த நூறு திரைப்படங்களில் மூன்று திரைப்படங்கள் 2000-ம் ஆண்டின் கோடைக்காலத்தில் வெளியாகின. மணிரத்னத்தின் ‘அலைபாயுதே’, ராஜீவ் மேனன் இயக்கிய ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ‘குஷி’- இவைதான் அந்த மூன்று படங்கள். இவற்றில் ‘குஷி’, மே 19 அன்று வெளியானது. இன்றோடு அந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

மற்ற பல கதாநாயகர்களைப் போலவே 1990களின் தொடக்கத்தில் அறிமுகமான விஜய்யும் காதல் படங்களின் மூலம்தான் திரைத் துறையில் நிலையான இடத்தைப் பிடித்தார். ‘பூவே உனக்காக’, ‘லவ் டுடே’, ‘ஒன்ஸ் மோர்’, ‘காதலுக்கு மரியாதை’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என விஜய்யின் தொடக்க ஆண்டுகளின் வெற்றித் திரைப்படங்கள் பலவும் காதலை மையமாகக் கொண்டவை. இந்தப் பட்டியலில் மிக முக்கிய இடம் பிடிக்கத்தக்கது ‘குஷி’.

வித்தியாச விஜய்

’குஷி’ பல வகைகளில் விஜய்க்கு வித்தியாசமான படமாக அமைந்தது. வெளிநாட்டுக்குச் சென்று படிக்க விரும்பும் பணக்கார இளைஞராக நடித்திருந்தார். முதல் முறையாக நெற்றிக்கு மேலே இருக்கும் முன்பக்கத் தலைமுடி மட்டும் சுருளாக இருக்கும் ‘கர்லிங் ஹேர்’ கெட்டப்பில் தோன்றினார். இந்த கெட்டப் ரசிகர்களிடம் பிரபலமடைய இதுவே காரணமானது. மேலும் பல படங்களில் இந்த கெட்டப்பை தக்க வைத்தார். நடிப்பிலும் அதிக வசனம் சாராத எக்ஸ்பிரஷன்கள் வழியிலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். விஜய்யின் கதாபாத்திரம், கெட்டப், உடல் மொழி, நடிப்பு என அனைத்தும் வித்தியாசமாக அமைந்திருந்தன.

வெற்றிக்கு வித்திட்ட அம்சங்கள்

நடிகர் அஜித் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துப் புகழ்பெற்ற ‘வாலி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித்துக்கு இணையான விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். ‘வாலி’ படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் அறிமுகமான ஜோதிகா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தார். வெவ்வேறு மூலைகளிலிருந்து வந்த மாறுபட்ட பின்னணி கொண்ட நாயகனும் நாயகியும் நண்பர்களாகி காதலாக உருமாறும் தருணத்தில் ஒரு சின்ன மனஸ்தாபம் பெரிய ஈகோ மோதலாகிப் பிரிந்து கடைசியில் இருவருக்கும் இடையிலான காதல், ஈகோவை வெல்லும் கதை.

இப்படிப்பட்ட கதையில் மையக் கதாபாத்திரங்கள் வலுவானதாகவும் ரசிக்கத்தக்க குணாம்சங்களும் நிறைகுறைகளும் இருப்பவையாக அமைந்திருக்க வேண்டும். எஸ்.ஜே.சூர்யா சிவா, ஜெனிபர் என மையக் கதாபாத்திரங்களைச் சிறப்பாகவும் பிரத்யேக குணாம்சங்கள் நிறைந்தவையாகவும் உருவாக்கியிருந்தார். இருவருக்கும் பொதுவான ஈகோவும் காதலும்கூட அழகாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தது. கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி விஜய், ஜோதிகா இருவரும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள்.

தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. ‘மேக்கரீனா’ விஜய்யின் அறிமுகப் பாடலில் பாலிவுட் நட்சத்திரமான ஷில்பா ஷெட்டி நடனமாடியிருந்தார். டி.ராஜேந்தரின் ’மோனிஷா என் மோனலிசா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்த மும்தாஜ் இந்தப் படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாகப் பிரபலமானார்.

திருப்புமுனைத் திரைப்படம்

தமிழில் விமர்சகர்களின் பாராட்டையும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘குஷி’, விஜய், ஜோதிகா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் திரைவாழ்வில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இன்று 60 படங்களுக்கு மேல் நடித்து மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தை அடைந்திருக்கும் விஜய்யின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் ‘குஷி’ இடம்பெறாமல் இருக்கவே முடியாது என்னும் அளவுக்கு அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் மட்டுமல்லாமல் பொதுவான சினிமா ஆர்வலர்களுக்கும் அது மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது.

‘குஷி’ படத்தின் வெற்றி இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவை மொழி எல்லைகளைக் கடக்கச் செய்தது. இதே கதையை தெலுங்கில் பவன் கல்யாண் - பூமிகாவை வைத்து மறு ஆக்கம் செய்தார். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். 2001-ல் ‘குஷி’ என்ற தலைப்பிலேயே வெளியான தெலுங்குப் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. இதே கதையை இந்தியிலும் இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் எஸ்.ஜே.சூர்யா, இந்திப் பதிப்பை ஸ்ரீதேவியின் கணவரும் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவருமான போனி கபூர் தயாரித்திருந்தார். ஃபர்தீன் கான், கரீனா கபூர் நடித்திருந்த இந்தி மறு ஆக்கம் 2003-ல் வெளியாகி வெற்றிபெற்றது.

எல்லாவற்றையும்விட இன்று தொலைக்காட்சியில் போட்டால்கூட டி.ஆர்.பி எகிறவைக்கும் படம் ‘குஷி’. காலத்தால் அழியாத காதல் படங்களில் இடம்பிடித்த காதல் படங்களின் பட்டியலில் இந்தப் படத்துக்கு நிச்சயம் இடம் உண்டு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x