Published : 19 May 2020 12:48 PM
Last Updated : 19 May 2020 12:48 PM

அதிக சம்பளம் பெற்றவர் என்ற பட்டம் ஏன் பெண்களுக்குக் கிடைக்கக்கூடாது? - தமன்னா காட்டம்

அதிக சம்பளம் பெற்றவர் என்ற பட்டம் ஏன் பெண்களுக்குக் கிடைக்கக்கூடாது? என்று சம்பள சர்ச்சை குறித்து தமன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரவிதேஜாவின் அடுத்த படத்தில் நடிக்கக் கேட்டு தமன்னாவை தயாரிப்பு தரப்பு அணுகியதாகவும், அவர் கேட்ட அதிக சம்பளத்தைத் தர மறுத்ததால் அந்தப் படத்தில் நடிக்க தமன்னா மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வந்தன. இதுகுறித்து தெளிவுபடுத்த அறிக்கை ஒன்றை தமன்னா வெளியிட்டுள்ளார்.

"இதுபோன்ற கற்பனையான கதைகளில் உண்மையில்லை. பிப்ரவரி மாதம் எனது மேலாளரைத் தயாரிப்புத் தரப்பு அணுகியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சர்வதேச அளவில் கரோனா நெருக்கடி ஏற்பட்டதால் தயாரிப்புத் தரப்பே மேற்கொண்டு பேச்சுவார்த்தையை நிறுத்தியது. இது ஒரு நிச்சயமற்ற சூழல். சரியான பாதுகாப்பு முறைகள் அமலில் வரும் வரை எந்தத் தயாரிப்பு நிறுவனமும் தற்போது படப்பிடிப்புக்குச் செல்வதாக எனக்குத் தெரியவில்லை.

எனது சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களில் நான் எப்போதும் தொழில்முறை கண்ணியத்தைக் காப்பேன். ரவிதேஜாவிடம் எனக்கிருக்கும் நல்ல நட்பை வைத்துப் பார்த்தால், அவர் படத்தை நான் நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும் சம்பளம் என்று வரும்போது அது அந்தந்த நடிகரின் தனி முடிவு. அவரது மதிப்பைத் தீர்மானிப்பதும், கொடுக்கும் சம்பளத்துக்கு சமரசம் செய்து கொள்வதும், செய்யாமல் போவதும் அவரவர் விருப்பம். ஒரு நடிகை எப்போதுமே அவரது சம்பளத்தில் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்பது போன்ற ஒருதலைப்பட்சமான எண்ணங்களை நாம் அழிக்க வேண்டும்.

இதே கேள்விகள் ஒரு நடிகரிடம் கேட்கப்படுவதில்லை. துறையில் ஒருவராக, நாங்களும் இந்த நிலையை அடைய கடினமாக உழைத்துள்ளோம். ஒவ்வொரு படத்துக்கும் கதாநாயகனைப் போலவே கதாநாயகியும் தேவை. அதிக சம்பளம் பெற்றவர் என்ற பட்டம் ஏன் பெண்களுக்குக் கிடைக்கக்கூடாது? அந்த உரிமை ஆண்களுக்கு மட்டும்தான் உள்ளதா என்ன?" என்று தமன்னா கேட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x