Published : 17 May 2020 10:25 AM
Last Updated : 17 May 2020 10:25 AM
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த படம் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’. ஷங்கர் இப்படத்தை தயாரித்திருந்தார். மிகப்பெரிய வெற்றிபெற்ற இப்படம், காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிப்பதற்கான அடித்தளமாக அமைந்தது. அதோடு இன்றளவும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாகவும் இப்படத்தின் காட்சிகள் நினைவுகூரப்படுபவை.
இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘24ஆம் புலிகேசி’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. ஆனால் படக்குழுவினருக்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தயாரிப்பாளரான ஷங்கருக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதால் வடிவேலுவின் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இப்படம் மீண்டும் தொடங்கப்படுமா இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘23ஆம் புலிகேசி’ திரைப்படம் பற்றி நடிகர் சிம்புதேவன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் ‘23-ம் புலிகேசி' படத்தில் வடிவேலுவை நாயகனாக்கியது ஏன் என்பது குறித்து சிம்புதேவம் கூறியுள்ளதாவது:
இந்த படத்தில் வடிவேலு நடித்தால் சரியாக இருக்கும் என்று தோன்றியது. ஷங்கர் சாருக்கும் அது பிடித்திருந்தது. அதில் அவர் நடித்துக் கொடுத்ததும் தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். என்னதான் கதை எழுதுபவர் முயற்சித்தாலும் அது 85% தான் முழுமையடையும். ஆனால் அந்த கதையில் நடிக்கும் நடிகர் மனது வைத்தால் மட்டுமே மீதி 15% முழுமையடையும். வடிவேலு மாதிரியான ஒரு கைதேர்ந்த கலைஞன் அந்த கதாபாத்திரத்துக்கு பொருந்திப் போனதுதான் பெரிய பிளஸ்.
இவ்வாறு சிம்புதேவன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT