Published : 16 May 2020 10:37 AM
Last Updated : 16 May 2020 10:37 AM
ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் திரையரங்கங்கள், வணிக வளாகங்கள், அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இவை மீண்டும் திறக்கப்படுவது குறித்து உறுதியாக தெரியவில்லை.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொல்கத்தா ஐநாக்ஸ் திரையரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலர் தங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று சமூகவலைதளங்களில் குற்றம்சாட்டி வந்தனர். இன்னும் சிலர் ஐநாக்ஸ் குழும திரையரங்கங்களின் முன்னால் எதிர்ப்பு வாக்கியங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷமிட்டும் போராட்டம் நடத்தினர்.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. ஐநாக்ஸ் குழுமத்தின் சமூகவலைதள பக்கங்களில் தங்களை ப்ளாக் செய்து விட்டதாகவும் சில ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஐநாக்ஸ் குழுமம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் யாரும் ஐநாக்ஸ் குழும ஊழியர்கள் கிடையாது. அவர்கள் இன்னோவ் எனப்படும் நிறுவனத்தின் மூலம் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள். ஐநாக்ஸ் மற்றும் இன்னோவ் நிறுவனத்துக்கு இடையேயான ஒப்பந்தம் கடந்த மார்ச் 31ஆம் தேதியே முடிந்துவிட்டது. இது இன்னோவ் நிறுவனத்துக்கும் முறையாக தெரியப்படுத்தப்பட்டது.
70,000 ஆயிரம் ஊழியர்களை கொண்ட இன்னோவ் நிறுவனம் ஆண்டுக்கு 1300 கோடி வருமானம் ஈட்டுகிற போதிலும் தன்னுடைய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கிறது. அந்த ஊழியர்கள் மத்தியில் ஐநாக்ஸ் நிறுவனம் குறித்து தவறான எண்னத்தை விதைக்கிறது. இதற்கு ஐநாக்ஸ் குழுமம் கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதுடன் அந்த ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்கி அவர்களிடம் உண்மையை எடுத்துரைக்குமாறு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT