Published : 14 May 2020 01:33 PM
Last Updated : 14 May 2020 01:33 PM
சலூன் கடைக்காரர் மோகனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து, புத்தாடைகள் கொடுத்துப் பாராட்டு தெரிவித்துள்ளார் பார்த்திபன். மேலும், மோகன் மகளின் கல்விச் செலவையும் ஏற்றார்.
ஊரடங்கு காரணமாக 50 நாட்களுக்கும் மேலாகத் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சலூன் கடைக்காரர்கள். அவர்களில் ஒருவரான பி.மோகன், மகளின் படிப்புச் செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை எடுத்து, தன்னுடைய பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்குச் செலவிட்டுவருகிறார்.
இந்தச் செய்தி வைரலாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து மருத்துவர் மோகனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்தார்கள். தற்போது நடிகரும், இயக்குநரான பார்த்திபன் மோகன் மகளின் ஓராண்டு கல்விச் செலவை ஏற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், அருகில் உள்ள நெல்லை தோப்பு கரோனா பாதிப்பால் முழுவதுமே முடக்கப்பட்டது. பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாளர்களை அதிகம் வசிக்கும் அந்தப் பகுதியில் வாழும் மக்களின் பெருந்துயர் கண்டு, சிறு சிறு உதவிகளைச் செய்து வந்தார்.
தனது மகளின் மேற்படிப்புக்காக பல வருடங்களாக சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தைத் தவிர, வேறு எதுவும் இல்லாமல் தவித்தபோது, அவரது மகள் நேத்ரா அந்தப் பணத்தை எடுத்து உதவிடுமாறு கூற, மொத்தப் பணத்தையும் எடுத்து அந்தப் பகுதியில் வசித்து வந்த சுமார் 6000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை, மற்றும் காய்கறிகள் தொகுப்பை உரிய அனுமதி பெற்று வழங்கியிருக்கிறார். இது இணையவழி வந்த காணொலிச் செய்தி.
இந்தச் செய்தி என்னைப் பெரிதாகப் பாதித்த நிலையில், எனது நண்பர் சுந்தர் உதவியுடன் நேத்ராவிடமும், மோகனிடம் பேசி எனது மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் மனநெகிழ்வோடு பகிர்ந்து கொண்டேன். மேலும், தாங்கள் பெரும் பணம் படைத்தவர்கள் இல்லையென்றாலும், உதவ வேண்டும் என்ற மனம் கொண்ட நேத்ராவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று அவர்களுக்கு புதிய ஆடைகள் பட்டு வேஷ்டி, பட்டுப் புடவை, அங்கவஸ்திரம், நேத்ராவுக்கு புது உடைகள், கிரீடம், இனிப்புகள், பழங்கள் என அனைத்தையும் அவர்களுக்கு நண்பர் சுந்தர் மூலம் கொடுத்தனுப்பி பார்த்திபன் மனிதநேய மன்றத்தின் சார்பாக மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்.
மேலும், நேத்ராவின் இந்த ஆண்டு பள்ளிப் படிப்புக்குரிய அனைத்துச் செலவுகளையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். வேறெந்த உதவியும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறேன். பார்த்திபன் மனிதநேய மன்றத்தின் சார்பாக இது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு இந்த நிகழ்வு பெரும் மனநிறைவை அளித்தது".
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT