Published : 13 May 2020 12:43 PM
Last Updated : 13 May 2020 12:43 PM
2009-ல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான ‘அவதார்’ உலக அளவில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பு நிலவி வந்தது. எனினும் ஜேம்ஸ் கேமரூன், அடுத்த பாகத்தை உடனடியாகத் தொடங்கவில்லை.
பல வருடத் திட்டமிடல்களுக்குப் பிறகு 'அவதார்' படத்தின் அடுத்த நான்கு பாகங்களுக்கான படப்பிடிப்பை கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜேம்ஸ் கேமரூன் தொடங்கினார். தொடர்ச்சியாக அடுத்த 4 பாகங்களையும் எடுத்து விடுவது என்ற அடிப்படையில் படப்பிடிப்புகள் நடந்து வந்தன. 'அவதார்' இரண்டாம் பாகம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் அவதார் படங்களின் படப்பிடிப்பும் நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால் ’அவதார்’ படத்தின் வெளியீடு தள்ளிப்போகலாம் என்று தகவல் பரவியது. 'அவதார்' இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்து இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
'' ‘அவதார் 2’ பட வேலைகளை மீண்டும் தொடங்க விரும்புகிறேன். ஆனால் அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தால் அதற்கு சாத்தியமில்லை. எனவே அனைத்தும் தற்காலிகமாக நின்று போயுள்ளது.
நாங்கள் நியூசிலாந்து நாட்டில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். ஊரடங்கால் அதை நடத்த முடியவில்லை. விரைவில் அனைத்தும் சரியானதும் அங்கு செல்லவேண்டும்.
அதே நேரத்தில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் நியூசிலாந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எனினும் எங்கள் படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியும் என்பது இப்போதைக்கு நல்ல செய்தி.
தொழில்நுட்ப வேலைகளை முடிந்தவரையில் வீட்டில் இருந்தபடியே செய்து வருகிறோம். எனவே பட வெளியீட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று நம்புகிறோம்''.
இவ்வாறு ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT