Published : 12 May 2020 03:13 PM
Last Updated : 12 May 2020 03:13 PM
தனது வேண்டுகோளை ஏற்று போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்வருக்கு லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்
கரோனா ஊரடங்கினால் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். தற்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை பகிர்ந்து லாரன்ஸ், "இவர்கள் ராஜமுந்திரி, விஜயவாடா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. உணவு, இருப்பிடம் இல்லாமல் இங்கு சிக்கிக் கொண்டுள்ளனர். வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். நீண்ட நாட்களாக தங்களின் குடும்பம், குழந்தைகளை விட்டுப் பிரிந்திருக்கின்றனர். அவர்களுக்கு 15 நாட்களுக்குத் தேவையான உணவை நான் தந்துள்ளேன். அவர்களின் போக்குவரத்துக்கு அரசாங்கத்தைக் கோருகிறேன்" என்று முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தற்போது அவர்களுக்கான போக்குவரத்தை தமிழக அரசு ஏற்பாடு செய்திருப்பதற்கு லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பதிவில் லாரன்ஸ் கூறியிருப்பதாவது:
"நமது முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு என் நன்றிகள். கரோனா நெருக்கடியால் பல நாட்களாக உணவு, இருப்பிடம் இல்லாமல் சென்னையில் சிக்கியிருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த 37 பேர் வீடு திரும்ப போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.
எனது கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஏற்றார். அவரது செயலாளர் விஜயகுமார் என்னை தொலைபேசியில் அழைத்து எனது கோரிக்கை பற்றி கேட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்தார். ஒரு வாரத்துக்குள் 37 பேருக்குமான போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் ரயிலில் வீடு திரும்பிவிட்டனர்.
எனது கோரிக்கையின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த நமது முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, அவரது செயலாளர் விஜயகுமார் , ஆட்சியர் ஜான் லூயி மற்றும் மக்கள் தொடர்பாளர் ராதாக கண்ணன் ஆகியோருக்கு என் நன்றிகள்
நமது முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்க ராகவேந்திர சுவாமியை வேண்டுகிறேன். சேவையே கடவுள்"
இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT