Published : 08 May 2020 09:04 PM
Last Updated : 08 May 2020 09:04 PM
அரசாங்க அமைப்பைக் கேள்வி கேட்போமா? நகர்ந்து விடுவோமா? என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
'அசுரன்' வெற்றிக்குப் பிறகு சூரி நடிக்க வேண்டிய படத்தின் பணிகளை கவனித்து வந்தார் வெற்றிமாறன். ஆனால், கரோனா அச்சுறுத்தலால் அனைத்து பணிகளுமே தடைப்பட்டுள்ளது. சூரி படத்தை முடித்துவிட்டு, சூர்யா நடிக்கவுள்ள 'வாடிவாசல்' படத்தின் பணிகளை கவனிக்கவுள்ளார்.
தற்போது கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் வீட்டில் இருந்தபடியே தனது அடுத்த படங்களுக்கான திரைக்கதை அமைப்பை இறுதி செய்து வருகிறார் வெற்றிமாறன். மேலும் 'தி இந்து' ஆங்கில நாளிதழின் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேட்டி அளித்துள்ளார்.
அதில் இந்த கடினமான சூழல்களில் கலையின் தேவை குறித்த கேள்விக்கு இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருப்பதாவது:
"மனிதனாக இருக்கிறோமென்றால் நமக்குக் கலையை உருவாக்கும் திறன் உள்ளது என்று பொருள். கலை இல்லாமல் நாம் முழுமையடைய முடியாது. என்ன சூழல் இருந்தாலும், கஷ்டம் இருந்தாலும், கலை தொடர வேண்டும். இனி நாம் எந்த மாதிரியான கலையை உருவாக்கப் போகிறோம் என்பதைத்தான் நாம் இனி பார்க்க வேண்டும். பெரிய பட்ஜெட் படங்களை, பல நூறு பேரை ஒன்றாகச் சேர்த்து நடிக்க வைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.
பல பெரிய படங்கள் வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றன. சில படங்கள் தயாரிப்பில் முடங்கியுள்ளன. படங்களின் கதை குறித்தும் விவாதம் ஆரம்பமாகும். இந்த ஊரடங்கைப் பற்றிப் பேச வேண்டுமா, புறக்கணிக்கப் போகிறோமா? ஊரடங்கின் முதல் சில நாட்களில் மும்பையிலிருந்து திருச்சிக்கு நடந்து வந்த இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கதைகளை சொல்லப் போகிறோமா? அல்லது அவர்களைப் புறக்கணிக்கப் போகிறோமா? இதை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பைக் கேள்வி கேட்போமா? அல்லது நடந்ததை மறந்து நகர்ந்து விடுவோமா?
இந்த அமைப்பைக் கேள்வி கேட்போமா அல்லது அதை ஒரு குறிப்பிட்ட மதம், சாதி, பகுதிக்கானதாக மாற்றும் மக்களைக் கேள்வி கேட்போமா? இதெல்லாம் நம்மை நாமே கேட்கவேண்டிய மிக முக்கியக் கேள்விகள். கலை மனிதனின் மனசாட்சி. கலை என்றும் தொடர வேண்டும்"
இவ்வாறு இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT