Published : 08 May 2020 05:32 PM
Last Updated : 08 May 2020 05:32 PM
மே 11-ம் தேதி முதல் திரையுலகப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, எந்தெந்தப் பணிகளுக்கு எத்தனை பேர் பணிபுரிய வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை, சின்னத்திரை சம்பந்தப்பட்ட எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இதனால் திரைத்துறையினருக்குப் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தொழில்துறையினருக்குப் பல்வேறு விதிமுறைகளுடன் தொழில் தொடங்க அனுமதியளித்துள்ளது தமிழக அரசு.
இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதியளிக்குமாறு தயாரிப்பாளர்கள், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அதை ஏற்று தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும், கரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்தப் பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்குப் பிந்தைய இறுதிக்கட்டப் பணிகளைச் செய்வதற்காக மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
மேற்கண்ட தயாரிப்பாளர்களின் கோரிக்கையைப் பரிசீலித்த முதல்வர், கீழ்க்கண்ட தயாரிப்புக்குப் பிந்தைய இறுதிக்கட்டப் பணிகளை மட்டும் மே 11-ம் தேதி முதல் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளனர்.
* படத்தொகுப்பு (Editing) (அதிகபட்சம் 5 பேர்)
* குரல் பதிவு (Dubbing) (அதிகபட்சம் 5 பேர்)
* கம்ப்யூட்டர் மற்ரும் விஷுவல் கிராபிக்ஸ் (VFX) (10 முதல் 15 பேர்)
* கலர் கிரேடிங் (DI) (அதிகபட்சம் 5 பேர்)
* பின்னணி இசை (Re-Recording) - (அதிகபட்சம் 5 பேர்)
* ஒலிக்கலவை (Sounde Design/Mixing) - ( அதிகபட்சம் 5 பேர்)
எனவே, இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள், இப்பணியில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு உரிய அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுத் தந்து, அவர்கள் சமூக இடைவெளியுடனும் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி உபயோகித்தும், மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்துக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியும் பணி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT